
ஜி.வி.பிரகாஷ், ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பார்த்திபன், விஜய், முத்தையா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, சி.வி.குமார், ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படத்தின் டிரைலரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட இயக்குனர் ஆதிக்கின் அப்பா ரவி கந்தசாமி பெற்றுக் கொண்டார். பல வருடங்கள் உதவி இயக்குனராய் பணிபுரிந்து இப்படத்தில் இணை இயக்குனராய் பணிபுரிந்திருக்கும் ரவி கந்தசாமியை கவுரப்படுத்தும் வகையில் நடந்த இந்நிகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ செய்தது.
படத்தை பற்றி தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு பேசும்போது, இயக்குனர் ஆதிக் மிகவும் திறமைசாலி, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கதையை சில வருடங்களுக்கு முன் என்னிடம் கூறினார். அப்பொழுது என் நிறுவனத்தின் கீழ் சில படங்கள் தயாரித்து வந்ததால் என்னால் இப்படத்தை தயாரிக்க இயலவில்லை. இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் ஜெயகுமார் தயாரிக்க முடிவு செய்தது மிக நேர்த்தியான முடிவு என்றார்.
நிகழ்ச்சியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு குட்டி கதையுடன் ஆரம்பித்த இயக்குனர் பார்த்திபன் கூறுகையில் ‘ஜி.வி.பிரகாஷை இப்படி பார்க்க மிக ஆச்சர்யமாய் உள்ளது. பல ஐட்டங்களை உள்ளடக்கியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ‘ஐட்டம் (Item)' என்று கிண்டல் செய்தார். இயக்குனர் முருகதாஸ் பேசுகையில், வெவ்வேறு துறைகளை கடந்து செல்லும் ஜி.வி.பிரகாஷுக்கு எனது வாழ்த்துக்கள்.
முதலில் என்னுடைய தயாரிப்பில்தான் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த எண்ணினேன். எனினும் என் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கண்டிப்பாக நடிப்பார் எனக் கூறினார். ‘டார்லிங்’ படத்தில் கதாநாயகனாய் அறிமுகம் செய்ததற்கும், இப்பொழுது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுவதிலும் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது என கூறினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
படத்தின் கதாநாயகனும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் டீசர் வெளியீட்டு விழாவை சிறப்பித்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
Post a Comment