யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் சில திணைக்கள அதிகாரிகள் தடையாக உள்ளனர்.அவ்வாறான அதிகாரிகள் மீது பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நாம் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். எமது மாவட்டத்தின் திட்டங்கள் காலதாமதமாவதற்கு இங்குள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். சில திணைக்களங்களின் அதிகாரிகள் அபிவிருத்தி திட்டங்களின் போது அவர்களுடைய வேலைத்திட்டங்களின் வவுச்சர்களை வேண்டுமென்றே காலதாமதமாக்குகின்றனர். இங்குள்ள சில தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதில்லை.
அவர்களில் பலர் இனங் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு விஷமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு எமது மாவட்டத்தின் அபிவிருத்தியே முக்கியமாகும். எமது திட்டங்களைக் கையகப்படுத்தச் சிறந்த ஒப்பந்தகாரர்கள் இல்லாமையாலும் அவை காலதாமதமாகின்றன. எது எப்படி இருப்பினும் நாம் எமது மாவட்டத்துக்கான நடப்பாண்டுத் திட்டங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவேற்ற முழு முயற்சிகளை எடுத்து செயற்பட்டு வருகின்றோம் – என்றார்.
வடக்கு மாகாணத்தில் மாகாண சபையால் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 525 மில்லியன் ரூபா நிதி இன்றுவரை திறைசேரியில் இருந்து கிடைக்கப்பெறவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Post a Comment