இன்றைய தினம் நடைபெறவுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய முழுமையான கதவடைப்புக்கு தமது ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் போராடிய தியாகியாகவே திலீபனை வருடா வருடம் அவரது நினைவு தினத்தில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்த வருடம் சிறீலங்கா பொலிஸாரின் முயற்சியினால் இந்த நினைவுகூரல் சட்டரீதியாகத் தடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமை மீதான தடை என்றே எமது ஒன்றியம் கருதுகின்றது.
ஆகவே அரசின் இந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பை வெளிப்படுத்த இன்றைய தினம் (28.09.2020) தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து அறிவித்துள்ள வடக்கு – கிழக்குத் தழுவிய முழுமையான கதவடைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்குவது எமது கடமை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கருகிறது.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம், மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்தக் கதவடைப்புப் போராட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் கோரி நிற்கின்றோம்.
மேலும் வணிக அமைப்புக்கள், போக்குவரத்துச் சேவைகள், தனியார் துறையினர் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி வடகிழக்கை முழுமையாக முடக்குவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்கான குரலை ஒன்றிணைத்து எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
உரிமையிலும் நீதியிலுமே உண்மையான அமைதியும், நல்லிணக்கமும் மீளக் கட்டியெழுப்பப்படவேண்டும் என இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment