நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தில் பிரமிடு போன்ற அமைப்பு பதிவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விண்வெளி மற்றும் கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. சூரியக் குடும்பத்தில் ஒரு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இந்த கியூரியாசிட்டி ரோவர் அங்கிருந்த படி புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இவ்வாறு சமீபத்தில் கியூரியாசிட்டி எடுத்து அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே பிரமிடு போன்ற தோற்றம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது பார்ப்பதற்கு எகிப்தில் இருப்பதைப் போன்று பிரமிடு வடிவில் உள்ளது. இந்த அமைப்பு ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், செவ்வாய் கிரகத்தில் பண்டைய எகிப்து நாகரீகத்தினர் வாழ்ந்திருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேற்று கிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘பண்டைய நாகரிகத்தினர் கட்டிய பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை, ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது.
இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும்' என தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சிலர் இந்த பிரமிடு தோற்றம் காற்றினால் உருவாகி இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
ஏற்கனவே, செவ்வாய் குறித்து பல விசித்திர புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்துள்ளன. செவ்வாயில் பல்லி இருப்பது போன்றும், மனிதர் ஒருவரின் நிழல் என அதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். இதுவும் அந்த வகையில் ஒன்றா இல்லை நிஜமானதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post a Comment