
ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என்று சட்டம் போட்டிருக்கிறது அரசு. ஹெல்மெட் என்பது பாதுகாப்புக்குத்தான். அது விஜய் கெட்டப் போல் என்றும் மாறாதது. அதையும் தாண்டி, வேறென்ன பயன்கள் ஹெல்மெட்டால்?
வாழ்க்கையில் மறைக்க வேண்டியது வழுக்கையைத்தான் என எண்ணுபவர்களா நீங்கள்? அப்படியெனில் நீங்கள் செய்ய வேண்டிய தலையாயப் பணி ஹெல்மெட் வாங்குவது தான். ஆதார் கார்டில் எப்படி இருக்கிறோம் என்பதைவிட ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சரில் எப்படி இருக்கிறோம் என்பதுதானே முக்கியம்?
பொதுக்கூட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு முட்டை, தக்காளி, செருப்புத் தாக்குதல்களைச் சமாளிக்க உதவும். அரசியல்வாதிகளைப் பேட்டியெடுக்கும் நிருபர்களுக்கும் அவசியமான தேவை. ஏனெனில் அவர்கள் ‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க’ என்றால், அதிலிருந்து பாதுகாக்க உதவும்!
ஏர்போர்ட், மெட்ரோ ரயில் என எங்கெங்கு காணினும் ஆபத்து இருப்பதால், எப்போதும் ஹெல்மெட் இருப்பது நல்லது. பயணம் இல்லாதபோதும் பயம் இல்லாமல் இருக்க அணிவீர் ஹெல்மெட்!
வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருக்க, மனைவியாரின் பூரிக்கட்டை, பறக்கும் தட்டு இவற்றிலிருந்து தலையைப் பாதுகாக்க கட்டாயம் தேவை ஹெல்மெட்!
ஹெல்மெட் பழையதாகிவிட்டால் அதைத் தொட்டியாக்கி தோட்டத்தில் வைக்கலாம். மண்டையில் களிமண் இருப்பவர்களாயிருந்தால் இன்னமும் எளிது. முன்பு முடியோடிருந்த ஹெல்மெட் இப்போது செடியோடிருக்கும்!
அனைவரும் யோகா செய்ய வேண்டுமென அரசே அறிவுறுத்துவதால், யோகாசனம் செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெல்மெட் அணிந்து சிரசாசனம் செய்வது எளிது!
சிட்டிசன்களுக்கு மட்டுமல்ல, ஏடாகூட ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகத் தவிக்கும் நெட்டிசன்கள் இன்விசிபிள் மோடுக்குச் செல்லப் பயன்படுத்திக்கொள்ளலாம்!
தெருவோடு திரிந்த வாழ்க்கை வெறுத்துப்போய், திருவோடு ஏந்தும் நிலை வந்தாலும் ஹெல்மெட்டைக் கவிழ்த்தால் போதும். அது திருவோடாய் மாறி கை கொடுக்கும், கூடவே காசும் கொடுக்கும்!
ஹெல்மெட்டைத் தாண்டி மூளையைக் கசக்கி யோசித்தால் பதினெட்டு வித ஆங்கிள்கள், மாடல்களில் உபயோகிக்கும் டேபிள்மேட்டையும் தாண்டி பயன்படுத்தவல்லதுதான் ஹெல்மெட். முடி கொட்டி மொட்டையாகிவிடுவோம் என பயப்படாதீர்கள். கெட்ட சிவாவாக இருப்பதைக் காட்டிலும் மொட்ட சிவாவாக இருப்பது மேல். அமேசான் காட்டு அரிய வகை மூலிகைகளால்கூட போன உயிரைத் திரும்ப வரவழைக்க இயலாது. எனவே தவறாமல் ஹெல்மெட் அணிவீர். ஏனெனில் ‘தல’ போல வருமா? தலை போனால்தான் திரும்ப வருமா?
Post a Comment