
யோகா தெரியும். டோகா தெரியுமா? Dog + Yoga= Doga.
ஆமா பாஸ். நாய்களை வைத்துக்கொண்டு மனிதன் செய்யும் யோகா கலைக்கு ‘டோகா’ என்று பெயர். ஜப்பானில் ஆரம்பித்ததாய் சொல்கிறார்கள். இல்லை இல்லை... இந்த டெக்னிக் எங்களுக்கு சொந்தமானது என்கிறது இங்கிலாந்து.
வழக்கமான யோகாசனங்களை செய்யும்போது தங்கள் செல்லப்பிராணி நாய்களை சில பொசிஷன்களில் அருகில் வைத்துக்கொண்டு செய்வதைப்போல இருக்கிறது டோகா. டோகா செய்யும்போது பயத்தில் விடுபட்டு ஓடும் நாய்களும் உண்டு. எனவே தகுந்த மாஸ்டர்களை வைத்து மெள்ள மெள்ள தங்கள் எஜமானரோடு சேர்ந்து யோகா செய்வதே டோகாவுக்கு அழகு. ஒரு கட்டத்தில் எது நாய் எது மனுஷன் எனத் தெரியாத அளவுக்கு ஒன்றாக யோகாசன பொசிஷன்களில் டோகா செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
ஜென் தத்துவ நிலைப்படி நாய்களோடு மனிதன் யோகா செய்வது என்பது விலங்குகள் மீது மனிதனுக்கு அன்பு பெருக வழி செய்யும் என்கிறார்கள் ஜப்பானியர்கள்.
ஆனால், டோகா கலை இப்போது பரவிவரும் இங்கிலாந்தி லிருந்தே எதிர்ப்புக்குரல் எழும்பி இருக்கிறது.
இங்கிலாந்து அரசின் ‘டாக்ஸ் ட்ரெஸ்ட்’ எனப்படும் நாய் பாதுகாப்புக்கான சாரிட்டி அமைப்பு தான் கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளது.
‘இன்று டோகா வெறும் கவன ஈர்ப்புக்காகச் செய்யப்படுகிறது. இதனால் உண்மையான யோகாவுக்கு உண்டான மவுசு குறைந்துவிட்டது. யோகா, மாஸ்டர்களுக்குக் கட்டுப்பட்டு செய்யும் உன்னதக் கலை. நாய்களோடு செய்யும்போது கவனம் குறைவதோடு, யோகா செய்யும் பொசிஷன்களும் நிறைய மாறிப்போய்விடுகின்றன. இப்படி தவறுதலான பொசிஷன்களில் யோகாசனம் செய்யும்போது உடல்நிலை பாதிக்கப்படும் அல்லது யோகாவின் மகத்துவம் உணரப்படாமலே போய்விடும். தவிர நாய்களை சிலர் உடல்ரீதியாக துன்புறுத்தியும் விடுகிறார்கள்’ என்கிறார்கள்.
இந்தியாவுக்கு டோகா வந்துவிட்டது. ஆனால் இது வேற டோகா. டெல்லி ராஜபாதையில் மோடி தலைமையில் சர்வதேச யோகா தினத்தன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி யோகா செய்தார்களே...? அந்த இடத்தை அதற்கு முன்பு வெடிகுண்டுகள் எதுவும் வைக்கப்பட்டிருக்கிறதா என கண்ணும் கருத்துமாக பாதுகாத்த சிறப்பு வகை மோப்ப நாய்களை வைத்து செய்யப்பட்ட ஆபரேஷனுக்குப் பெயர் ‘ஆபரேஷன் டோகா’. ‘டோகா’ நாய்களில் ஒன்றான ஷோபியா ‘ஐஈடி’ (Improvised Explosive Device) வகை வெடிபொருளை சரியாகக் கண்டுபிடித்து அழிக்க போலீஸுக்கு உதவி செய்து அப்ளாஸ் அள்ளியது. நம்ம ஆட்களுக்கு வோட்காதான் தெரியும்!
Post a Comment