பண்பும் பணிவும் கொண்ட கடக ராசி அன்பர்களே!
சுக்கிரன் ஜூலை 26- வரை ரிஷபத்தில் இருந்து நற்பலனைத் தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் எந்த திட்டத்தையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் அதற்கு பலன் கிடைக்கும்.
ராகு உங்கள் ராசிக்கு 2-ம் இடமான சிம்ம ராசியில் இருந்து குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், திருட்டு சம்பவத்தையும் ஏற்படுத்தி இருப்பார். இனி அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. ஜூலை 27-ல் ராகு, உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சுமாரான நிலையே. அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது 8-ம் இடமான கும்பத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். அவர் ஜூலை 27ல், 7-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். இதுவும் சுமாரான இடமே. மனைவி வகையில் பிரச்னை, அலைச்சல், மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரலாம்.
புதன் ஜூலை 20- வரை உங்கள் ராசியில் இருப்பதால் வீட்டில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு ஏற்படலாம். பின் அவர் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான சிம்ம ராசிக்கு மாறுகிறார். அப்போது உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆகஸ்ட் 6-ல் அவர் வக்கிரம் அடைந்து உங்கள் ராசிக்கு மாறினாலும் அவரால் நன்மை தர இயலாது. கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட பொருள் விரயம், தொழிலில் நஷ்டம் முதலியன மறையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அதேநேரம் அனாவசிய செலவு வர வாய்ப்புண்டு.
குடும்ப நிலை சுமாராக இருக்கும். ஜூலை 20- வரையும், ஆக., 5-க்கு பிறகும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சிகள் கைகூட காலதாமதம் ஆகலாம். ஆனால் அதுவும் நல்லதற்கே என்று காத்திருங்கள். அவ்வப்போது விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 19,20 ஆக., 15,16-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். ஆனால் ஜூலை 30, 31-ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நிலைமை சீராக இருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். போட்டியாளர்கள் வகையில் பிரச்னை வரலாம். ஜூலை 21,22,25,26,27-ல் கல்லாப்பெட்டி உங்கள் கண்காணிப்பில் இருக்கட்டும்.
ஆக. 4, 5-ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலர் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக வெளிமாநிலம், வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண வாய்ப்பு உண்டு. ஜூலை 17, 18 ஆக. 13, 14-ல் சிறப்பான பலனை காணலாம். இந்த நாட்களில் டிரான்ஸ்பர், பதவி, சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். ஜூலை 20-க்கு பிறகு வேலைப்பளு கூடும். இருப்பினும், இதை ஏற்றுக்கொண்டால் பிற்காலத்தில் பதவி உயரும் போது பணிகளை எளிதாகச் செய்ய வாய்ப்பாக இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டால் மனம் மகிழ்வீர்கள். ஜூலை 26-க்கு பிறகு முயற்சிகளில் தடை, மனதில் சோர்வு, பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதம் ஆகலாம். செவ்வாயால் எதிரிகளின் தொல்லை வரலாம். ஆக., 1,2,3-ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் ஆசிரியர்களிடம் அறிவுரை கேட்கவும். அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்க சற்று சிரத்தை எடுக்க வேண்டி இருக்கும். சிலர் சேர்க்கை சகவாசத்தால் கெட்ட பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு. கவனம். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் விளைச்சல் பெருகும். கால்நடை மூலம் அதிக வருவாய் எதிர் பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு விவகாரங்களில் தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கும்
பெண்கள் குதூகலமாக இருப்பர். பண வரவு இருக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும்.
சகோதரிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.
ஜூலை 20-க்கு பிறகு அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் ஆக., 5-க்கு பிறகு அதிக பளுவை சுமக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனை காணலாம்.
நல்ல நாள்: ஜூலை 17, 18, 19, 20, 23, 24, 28, 29, ஆக. 4, 5, 6, 7, 8, 13, 14, 15, 16
கவன நாள்: ஆக. 9,10- சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்
* சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு.
* மூதாட்டிகளுக்கு உதவி செய்தல்.
* செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை.
Post a Comment