இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கை அணிக்கு 388 என்ற கடின இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றுவரும் இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 356 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய எர்வின் 160 ஓட்டங்களைக் குவித்தார்.
பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. திமுத் கருணாரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மறுமுனையில் அரைச் சதம் கடந்த உபுல் தரங்க 71 ஓட்டங்களுடன் ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 55 ஓட்டங்களுடனும், முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 41 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா 33 ஓட்டங்களுடனும் வெளியேற, இலங்கை அணி 2ஆ-வது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அசேல குணரத்ன 24 ஓட்டங்களுடனும், ரங்கன ஹேரத் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி 63 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நேற்று தனது ஆட்டத்தை தொடர்ந்தது. 5 ஓட்டங்கள் பெற்றிருந்த ரங்கன ஹேரத் 22 ஓட்டங்களுடனும், அசேல குணரத்ன 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நேற்றுக் காலை போட்டி ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்திற்குள்ளேயே இலங்கை அணி மீதமிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் சிம்பாப்வே அணியை விட 10 ஓட்டங்கள் பின்தங்கியது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது சிம்பாப்வே. இலங்கை அணி பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் மஸகட்சா (7), சகப்பவா (6), முஸகண்டா (0), கடந்த போட்டியில் 160 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியை திணறடித்த எர்வின் (5) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிம்பாப்வே அணி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்து வந்த வில்லியம்ஸும் 22 ஓட்டங்களுடன் ஹேரத்தின் பந்தில் ஆட்டமிழக்க 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது சிம்பாப்வே.
அத்தோடு நேற்று மூன்றாம் நாள் பகல் நேர இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. உணவு இடைவேளையின் பின்னர் சிம்பாப்வே அணி சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகுதான் சிம்பாப்வே தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.
சிகண்டர் மற்றும் மூர் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்து அணியை மீட்டனர். இருவரும் சிறப்பானதொரு இணைப்பாட்டத்தை ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 145 வரை உயர்த்திக் கொண்டு போக இந்த ஜோடியை பிரித்தார் லஹிரு குமார. மூர் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இத்துடன் சிம்பாப்வே கதை முடிந்தது என்று மகிழ்ச்சியடைவதற்குள் அடுத்து வந்த வெல்லர் சிகண்டர் ரசா வுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேரம் முடியும்வரை நங்கூரமிட்டதுபோல் களத்தில் நின்று இலங்கை அணி பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றியது.
இதனால் சிம்பாப்வே அணி 252 ஓட்டங்கள் வரை சேர்த்தது. சிகண்டர் ரசா 97 ஓட்டங்களுடனும், வெலர் 57 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பாப்வே அணி சிகண்டர் ரசாவின் சதத்தின் உதவியுடன் அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற வலுவான ஓட்ட இலங்கை இலங்கை அணிக்கு கொடுத்துள்ளது.
2 ஆவது இன்னிங்ஸில் சிம்பாப்வே அணியின் சிகண்டர் ரசா 127 ஓட்டங்களையும் வெல்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கண ஹேரத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
388 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

Post a Comment