இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், நெய் அபிஷேகம், களபாபிஷேகம் கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, உதயாஸ்தமன பூஜை, படி பூஜை ஆகியவை நடைபெற்றன. ஆடிமாத பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை வருகிற 29-ந் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.
விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கை வளமாகவும் வேண்டியும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து, சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதே நிறை புத்தரிசி பூஜை ஆகும். அவ்வாறு பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். வருகிற 30-ந் தேதியன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.15 மணிக்கு முன்பாக நிறை புத்தரிசி பூஜைகள் நடைபெறும்.
கொல்லம் மாவட்டம் அச்சன் கோவிலில் இருந்தும், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் இருந்தும் கொண்டு வரப்படும் நெற்கதிர் கட்டுகள் ஆண்டாண்டு காலமாக பூஜைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அச்சன்கோவிலில் இருந்து நெற்கதிர்களை திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் சேகரித்து, சபரிமலை கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள். பாலக்காட்டில் இருந்து ஐயப்பா சேவா சங்கத்தினர் நெற்கதிர்களை எடுத்து வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறை புத்தரிசி பூஜை முடிவடைந்ததும் அன்றைய தினம் (30-ந் தேதி) இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டு, 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறுகின்றன.

Post a Comment