
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நேற்று ஹம்பண்டோலாவில் நடைபெற்றது. டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ், ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சாலமன் மைர் 13 ரன்களில் பிரதீப்பின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மசகட்சா, தனது உறுதியான பேட்டிங்கால் இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தார்.
98 பந்துகளில் மசகட்சா 111 ரன்களைக் குவிக்க ஜிம்பாப்வே அணி தலை நிமிர்ந்தது. அவருக்கு உதவியாக முசகண்டா 48, வில்லியம்ஸ் 43 ரன்களைச் சேர்க்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களைக் குவித்தது. இலங்கை அணியில் அசேலா குணரத்னே, வனிது ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
வெற்றி பெற 311 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான நிரோஷன் டிக்வெல்லாவும், குணதிலகாவும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி னார்கள். இதனால் இலங்கை அணி 14.3 ஓவர்களில் 100 ரன் களைக் கடந்தது. முதல் விக் கெட்டுக்கு இந்த ஜோடி 229 ரன் களைக் குவித்தது. இந்நிலையில் 116 பந்துகளில் 102 ரன்களை எடுத்த டிக்வெல்லா, வாலரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
டிக்வெல்லா அவுட் ஆன சிறிது நேரத்தில் குணதிலகாவும் வெளியேறினார். 111 பந்துகளில் 116 ரன்கள் எடுத்த அவரை வில்லியம்ஸ் அவுட் ஆக்கினார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த மெண்டிஸும் (28 ரன்கள்), உபுல் தரங்காவும் (44 ரன்கள்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருக்க, இலங்கை அணி 47.2 ஓவர்களில் 312 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக குணதிலகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி, இந்த தொடரில் 2-1 என முன்னணியில் உள்ளது.
Post a Comment