Ads (728x90)

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 21-ந் தேதி வரை படி பூஜை நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சுவாமி ஐயப்பனுக்கு களபாபிஷேகமும் நடைபெற்றது. முன்னதாக களபம் தாங்கிய கலசத்துடன் சிறப்பு ஊர்வலம் நடந்தது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் தலைமையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.

வருகிற 21-ந் தேதி வரை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற பூஜைகள் நடைபெறுகின்றன.

21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இதற்கிடையே பம்பையில் நேற்று அகண்ட நாம ஜெபம் நடைபெற்றது. அதனை ஐயப்பா சேவா சங்க தலைவர் தென்னல பாலகிருஷ்ண பிள்ளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Post a Comment

Recent News

Recent Posts Widget