இராணுவத்தினர் எந்தக் குற்றங்களையும் – காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட எவற்றையும் செய்யவில்லையாயின், காணாமற் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஏன் பயப்பட வேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.கொட்டகேனா பரமானந்த மாவத்தையில் உள்ள விகாரையில் பெரஹராவின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சரத் பொன்சேகா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
காணாமல் போனோர் அலுவலகம் இராணுவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவிக்கப்படுவது தொடர்பாகவும், இராணுவத்தை சரத் பொன்சேகா காட்டிக் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது:
காணாமல்போனோர் விடயத்தில் பொறுப்புக் கூறுவதற்கே காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுடன் இராணுவத்தினருக்குத் தொடர்பு இல்லை என்றால் அவர்கள் பயப்பட வேண்டியதில்லையே. போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் இடம்பெறவில்லையாயின் இராணுவம் அச்சமடையத் தேவையில்லையே.
தலைநகரில் மாணவர்கள் கடத்தல் உள்ளிட்ட சில சம்பவங்களில் இவற்றை யார் செய்தார்கள் என்பது நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் கண்டறியப்பட வேண்டும். தண்டனை வழங்கப்படவேண்டும். நான் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை. குற்றங்கள் விசாரிக்கப்பட்டால், இராணுவம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டால் இராணுவத்திற்குத்தான் நற்பெயர் ஏற்படும் — என்றார்.
Post a Comment