Ads (728x90)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில்  அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு  பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து  வருகிறோம். அந்தவகையில், தொண்டை வலியை குணப்படுத்த கூடியதும்,  நெஞ்சக கோளாறுகளை சரிசெய்ய வல்லதும், மூக்கடைப்பை போக்க  கூடியதுமான ஆடாதோடையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு  மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது  ஆடாதோடை. இது, தொண்டை கட்டை அகற்றி நல்ல குரல் வளத்தை கொடுக்கும். ஆடாதோடையோடு சிறிது மிளகு சேர்த்து தேனீராக்கி  குடிக்கும்போது தொண்டைக்கட்டு பிரச்னை சரியாகும். குரல் வளம் பெறும்.

கண்கள் பளீச்

ஆடாதோடை வீக்கத்தை கரைப்பதுடன் வலியை குறைக்க கூடியது.  ரத்தக்கசிவை போக்கும் தன்மை இதற்கு உண்டு. ஈரலை பலப்படுத்தும்.  கருப்பை கோளாறுகளை போக்கும். ஆடாதோடை பூக்கள் வெள்ளை நிறம் உடையது. இது, கண் நோய்களுக்கு மருந்தாகிறது. ஆடாதோடை பூக்களை  விளக்கெண்ணெயில் வதக்கி கண்களின் மேல் வைத்து கட்டினால் கண்களில்  ஏற்படும் சிவப்புத் தன்மை, எரிச்சல், வீக்கம் சரியாகும்.  கண்களுக்கு தெளிவை கொடுக்கும். ஆடாதோடை இலைகளை நீர்விடாமல்  அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறை 10 மில்லி அளவுக்கு குடித்துவர  கழிச்சல், சீதக்கழிச்சல், மாதவிலக்கின்போது அதிக ரத்தப்போக்கு  ஆகிய பிரச்னைகள் சரியாகும். ஆடாதோடை கருப்பைக்கு ஆரோக்கியத்தை  கொடுக்கும் தன்மை உடையது. கர்ப்பிணிகள் ஆடாதோடையை பயன்படுத்த  கூடாது.

தொண்டை வலி போகும்

ஆடாதோடையை பயன்படுத்தி தொண்டை வலியை சரிசெய்யும்  மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆடாதோடை இலை, மிளகு, தேன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு, 2 ஸ்பூன் ஆடாதோடை  இலைசாறு, சிறிது மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி  தேன் சேர்த்து குடித்துவர தொண்டைக்கட்டு, தொண்டை வலி குணமாகும்.  ஆடாதோடை நெஞ்சக கோளாறுகளுக்கு அதற்புத மருந்தாக விளங்குகிறது.  இருமலை போக்கும் தன்மை கொண்டது. நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றி  ஆரோக்கியமான சுவாசத்தை தருகிறது. ஆடாதோடையை பயன்படுத்தி  மூக்கடைப்பு, நீர்க்கோர்த்தல் பிரச்னைகளை சரிசெய்யும் மருந்து  தயாரிக்கலாம். ஆடாதோடை இலையின் மீது மற்றொரு இலை வைத்து மடித்து  சுருட்டி கட்டி, வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

இதை நெருப்பில்  காண்பித்தால் வரும் புகையை நுகரும்போது மூக்கடைப்பு சரியாகும்.  ஆஸ்துமா விலகிப்போகும். தூக்கமின்மைக்கான மருத்துவம்  குறித்து பார்க்கலாம். தூக்கமின்மை வந்தாலே வழக்கமாக மயக்கநிலை  தரும் மருந்துகளைதான் பயன்படுத்துகிறோம். இப்பிரச்னைக்கு  கசகசா, பால் ஆகியவை அற்புத மருந்தாகிறது. மதிய நேரத்தில்  அரை ஸ்பூன் அளவுக்கு கசகசாவை எடுத்து நீரில் ஊறவைக்கவும். இரவு நேரம்  ஆனதும் ஊறவைத்த கசகசாவை பாலில் இட்டு காய்ச்சி படுக்கப்போகும்  முன்பு குடித்துவர நன்றாக தூக்கம் வரும். கத்திரி செடியின் ஓரிரு  இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் தூக்கமின்மை பிரச்னை  சரியாகும்

Post a Comment

Recent News

Recent Posts Widget