வடக்கு – கிழக்கு இணைப்பு, கூட்டாட்சி என்பன புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால அறிக்கைக்கு பின்னிணைப்பு வழங்கியுள்ளது.பின்னிணைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
:1. இலங்கை மாகாணங்களின் ஒன்றியமாக ஒன்றாக இருத்தல் வேண்டும். இலங்கை ஓர் ஐக்கியமான – பிரிபடாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்னும் சட்டகத்தினுள் கூட்டாட்சி அரசொன்றாக இருத்தல் வேண்டும். அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு இணங்க மத்தியும் மாகாணங்களும் தமது தகவுப் பிரதேசங்களில் முழுமையான அதிகாரத்தைப் பிரயோகித்தல் வேண்டும்.
2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும். பெரும்பான்மைக் கருத்தொருமிப்பு பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுவதற்கு சார்பாக இருக்குமாயின், அது தொடர்பான நியதிகளும், நிபந் தனைகளும் குறித்துரைக்கப்படுதல் வேண்டும்.
3. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக அமைதல் வேண்டும். வரலாற்று ரீதியாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் குடியிருப்பதுடன் கூறப்பட்ட இரண்டு மாகாணங்களும் அந்த மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டமும் குடித்தொகை மாற்றங்களுக்கு மத்தியிலும், இன்றும் பெருமளவு தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகவே காணப்படுகின்றன. எவருக்கும் அநீதி இழைக்கப்படாதிருப்பதையும் அனைத்துக் குடிமக்களும் சமமான நடத்துகையைப் பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்துவதற்காகப் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
4. மாகாணங்களுக்கு குறித்தொதுக்கப்பட வுள்ள தத்துவங்களும் பணிகளும்மங்கள -முனசிங்க தெரிவுக்குழுவின் அறிக்கை, அரசமைப்பு சட்டவரைவு, 2000, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட பல்லின நிபுணர்கள் குழுவின் அறிக்கை மற்றும் மகிந்த ராஜபக்சவால் அங்கீகரிக்கப்பட்டதும், பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை தவிசாளராகக் கொண்டதுமான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை ஆகியவற்றின் விதப்புரைகளுக்கு இசைவானதாகவோ இருக்க வேண்டும். மேற்படி முன்மொழிவுகள் பற்றிய பரந்த மற்றும் கணிசமானதொரு கருத்தொருமிப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
5. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரபயோகிப்பதற்குத் தேவைப்படும் நிதிகளைத் திரட்டுவதற்கு அவசியமான தத்துவங்களை மாகாணங்கள் கொண்டிருத்தல் வேண்டும்.
6. மாகாணம் ஒன்றின் ஆளுநர், அரச தலைவரின் பிரதிநிதியாக மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் சீரான தொழில் உறவுமுறையொன்றை உறுதிப்படுத்துவதற்காக செயற்படுதல் வேண்டும் என்பதுடன் மாகாணத்தின் நிறைவேற்றுத் தத்துவத்தின் பிரயோகத்தில் தலையிடுவதற்கான தத்துவமெதனையும் கொண்டிருத்தல் ஆகாது. ஆனால் ஆளுரின் தத்துவங்கள் அரசமைப்பில் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
7. மாகாணங்களைச் சேர்ந்த பிரதி நிதிகளைக் கொண்ட பிரதிநிதித்துவக் குழுவொன்றாக செனட் (இரண்டாம் சபை) இருத்தல் வேண்டும் என்பதுடன் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மாகாணங்களிலிருந்து திருப்பி எடுத்துக் கொள்ளல் அல்லது அவற்றைக் குறைப்பதற்கான சாத்தியம் ஆகியவற்றை மேற்பார்வை செய்வதற்கான தத்துவங்கள் இதற்கு அளிக்கப்பட்டிருத்தலும் வேண்டும்.
8. அரசமைப்பு மீயுயர் சட்டமாக இருத்தல் வேண்டும் என்பதுடன் அரசமைப்புத் தொடர்பான அனைத்து விடயங்களையும் பொருள்கோடல் செய்வதற்கு அனைத்துப் பிணக்குகளையும் தீர்த்து வைப்பதற்கும் அரசமைப்பு நீதிமன்றம் பொறுப்பாக்கப்படுத்தல் வேண்டும்.
9. ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு கருத்தொருமிப்பை அடைவதற்கான நலன்கருதி, இடைக்கால அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முதன்மைக் கோட்பாடுகள் இரண்டு முதன்மைக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்குமாயின், அவற்றுடனான இணக்கத்தைப் பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது.
Post a Comment