பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் நாளைமறுநாள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த ஜூலை 28-ம் தேதி எம்.பி. பதவியையும் பிரதமர் பதவியையும் நவாஸ் இழந்தார். அந்த நாட்டு சட்டவிதிகளின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே கட்சி பொறுப்புகளை வகிக்க முடியும். அதன்படி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவர் பதவியையும் நவாஸ் ராஜினாமா செய்தார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி பதவியேற்றார். கட்சியின் செயல் தலைவராக சர்தார் முகமது யாகூப் கான் நாசர் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார்.
இந்நிலையில் நவாஸை மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதா கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 22-ம் தேதி மேலவையில் சில திருத்தங்களுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மக்களவை நாளை மீண்டும் கூடி திருத்தங்கள் செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற உள்ளது. புதிய சட்டத்தின்படி அரசு ஊழியர் அல்லாத யார் வேண்டுமானாலும் கட்சி பொறுப்புகளை வகிக்கலாம். இதன்மூலம் நவாஸுக்கு இடையூறாக இருந்த சட்ட சிக்கல் நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் நாளைமறுநாள் மீண்டும் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
Post a Comment