
சர்வதேச விதிமுறைகளை மீறி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 22 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. அவற்றில் 2 ஏவுகணைகள் ஜப்பான் வான்வெளியில் ஏவி சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் அணுகுண்டை விட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சோதனை செய்தது.
மேலும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்நிலையில், தென் கொரியா, ஜப்பானுடன் சேர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவின் சூப்பர்சோனிக் அதிநவீன போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. குவாம் தீவில் உள்ள அமெரிக்க முகாமில் இருந்து இந்த 2 விமானங்களும் ஜப்பான் கடல் பகுதி வழியாக அந்நாட்டு விமானங்களுடன் சென்று ஒத்திகையில் ஈடுபட்டன. தென்கொரியாவின் 2 போர் விமானங்களும் பங்கேற்றன. பின்னர் கொரிய தீபகற்பம் முழுவதும் பலமுறை போர் விமானங்கள் வட்டமிட்டபடி பயிற்சியில் ஈடுபட்டன.
இதற்கிடையில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், ‘ஜாய்ன்ட் சீப்ஸ் ஆப் ஸ்டாஃப்’ தலைவர் ஜெனரல் ஜோசப் டன்போர்ட் மற்றும் ராணுவ ஆலோசகர்களுடன் அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது வடகொரியாவின் மிரட்டலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றி விரிவாக ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார்.
அணு ஆயுதங்களை கொண்டு அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் வடகொரியா மிரட்டினால், அந்த சூழ்நிலையில் என்னவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார்.
Post a Comment