பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸின் புளோரிடா இல்லம் திருடர்களால் சூறையாடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 2,59,38,388 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டன.வீனஸ் வில்லியம்ஸ் யு.எஸ். ஓபன் தொடரில் விளையாடி வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புளோரிடா மாகாணத்தில் வீனஸ் வில்லியம்ஸின் 10 ஆயிரம் சதுர அடி வீடு உள்ளது. அங்கு திருட்டு நடைபெற்றதாக கடற்கரை பூங்கா காவல்துறை வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செப்டம்பர் 1 முதல் 5 வரையிலான காலகட்டத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. காவல்துறை தரப்பில் என்னென்ன பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுவிட்டன.
இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. 2000-ம் ஆண்டில் வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் சேர்ந்து இந்த வீட்டை வாங்கினர். இப்போது இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.14.9 கோடியாக உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையில் செய்தி வெளியான பிறகே காவல்துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு வீனஸ் வில்லியம்ஸின் செய்தித் தொடர்பாளர் கார்லஸ் ஃப்ளெம்மிங் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Post a Comment