வியட்நாமின் மத்தியப் பகுதியில் டேம்ரா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 49 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரைக் காணவில்லை.இதுகுறித்து வியட்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தரப்பில், ''வியாட்நாமின் மத்திய மற்றும் தென் பகுதியில் வீசிய டேம்ரா சூறாவளியால் மணிக்கு 90 கி.மீ. வரை பலமாக காற்று வீசியது. டேம்ரா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். 20 பேரைக் காணவில்லை. 40,000க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன'' என்று கூறப்பட்டுள்ளது.
டேம்ரா சூறாவளியால் வியட்நாமின் நா ட்ராங் நகரம் மிகுந்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 30,000 மக்கள் அவர்களது பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் அதிகமான புயல்களை சந்தித்து வருகிறது. மேலும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பெரும் மரணங்கள் ஏற்படுகின்றன.
Post a Comment