இங்கிலாந்து அணிக்கும், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையிலான பயிற்சி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. இப்போட்டிக்கு முன்னதாக அந்த அணி பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது. இந்த வகையில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து ஆடியது.
இப்போட்டியின் முதல் நாளின் இறுதியில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று காலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யவில்லை. முதல் நாளில் எடுத்த ஸ்கோருடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி, 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் பிலிப் 88 ரன்களையும், ஹின்சிப் 75 ரன்களையும் குவித்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 27 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். கிரேன், ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸை மட்டுமே ஆட முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து அணி அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வரும் 8-ம் தேதி கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியை சந்திக்கிறது
Post a Comment