
வடகொரியா கடந்த செப்டம்பர் 3-ம் தேதி ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்தது. இதற்குப் பதிலடியாக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை ஐ.நா. சபை விதித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின் றன.
இந்தப் பின்னணியில் தென்கொரிய தலைநகர் சியோலில் நேற்று நடந்த கருத்தரங்கில் ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் இகோர் மோர்குலோவ் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:
வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தக்கூடாது என்று ரஷ்யா கண்டித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக வடகொரியா எவ்வித அசாதாரண நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அதேநேரம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. வடகொரியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தென்கொரியா தயாராக உள்ளது. ஆனால் அமெரிக்கா வின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிப்பதற்கு அமெரிக்காவே காரணம்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ரஷ்ய தரப்பில் அமைதித் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா இன்னமும் பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ரஷ்யா கண்ணை மூடிக் கொண்டிருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
Post a Comment