சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது.எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும்.
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
சுரைக்காயை பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும். சுரைக்காயை விடச் சுரைக்காய் பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.
Post a Comment