மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது.ஜப்பானில் உள்ள காஹமிகஹரா நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவும் சீனாவும் தகுதி பெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஆட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஏற்கெனவே சீன அணியை வென்றதால் இந்திய அணி, அதிக தன்னம்பிக்கையுடன் இப்போட்டியில் களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கிய 25-வது நிமிடத்தில் நவ்ஜோத் கவுர் அடித்த பீல்ட் கோலின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தை சமன் செய்யும் முயற்சியில் சீன வீராங்கனைகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
47-வது நிமிடத்தில் சீனாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. பெனாலிடி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியின் டியாண்டியான் லுவோ கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. இதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனாலிடி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இத்தொடரின் சிறந்த கோல்கீப்பராக இந்திய வீராங்கனை சவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். முன்னதாக கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தற்போது மீண்டும் கோப்பையை வசப்படுத்தி உள்ளது. ஆசிய கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய மகளிர் அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. முன்னதாக கடந்த மாதம் ஆண்கள் பிரிவில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 3-வது இடத்துக்கு நடந்த போட்டியில் தென் கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது.
Post a Comment