Ads (728x90)

அமெரிக்க அரசு ஆண்டு தோறும் வழங்கிவரும் ‘க்றீன் கார்ட் லொட்டரி’ திட்டத்தை இரத்துச் செய்யப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று (1) தாக்குதல் நடத்திய தீவிரவாதி, மேற்படி லொட்டரி திட்டம் மூலமே அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தார். இதைச் சுட்டிக்காட்டியே இத்திட்டத்தை இரத்துச் செய்யப்போவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
“எமது நாட்டு மக்களின் பாதுகாப்பே எனது முதலும், முக்கியமானதுமான நோக்கம். அதை உறுதிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் தவறில்லை என்பதே எனது எண்ணம். அதன்படி, க்றீன் கார்ட் லொட்டரி திட்டத்தை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறேன். வெகு விரைவில் இத்திட்டம் இரத்துச் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட க்றீன் கார்ட் லொட்டரி திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ஐம்பதாயிரம் பேர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே நாற்பது இலட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தனர்.
இத்திட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம், அமெரிக்காவில் ஆண்டுதோறும் குடியுரிமை பெறுபவர்களின் விகிதாசாரம் 50%ஆல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் க்றீன் கார்ட் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 7ஆம் திகதி வரை பதிவுசெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ட்ரம்பின் அறிவிப்பையடுத்து இவ்வாண்டு பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் இரத்தாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget