
போராட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் நோக்கில், இன்றையதினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இறுதிப் போரின்போது கடத்தப்பட்டு, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறிந்து தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு எங்கும் அவர்களுடைய உறவினர்களால் கவனவீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியாவைச் சேர்ந்த உறவுகளும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இரவு பகலாகத் தமது சுழற்சி முறையிலான போராட்டத்தை கடந்த 300நாள்களாக ஒரே இடத்தில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 8 வருடங்களுக்குள், எவ்வாறான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந் ததோ அவை எல்லாவற்றையும் மேற்கொண்டனர். எனினும் அவர்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. தமது உறவுகள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில் அது குறித்து ஒரு தகவலும் கிடைக்காத பட்சத்திலும் தமது உடலையும் உள்ளத்தை யும் பக்குவப்படுத்திக்கொண்டு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தந்தை ஒருவர் அவரது போராட்டக் கனவு நனவாகாது உடல் சுகவீனமான நிலையில் உயிரிழந்த சோகச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா போராட்டக் களம் பல அனுபவங்களையும் மன உறுதியையும், போராடும் ஆற்றலையும் எமக்கு பெற்றுத்தந்துள்ளது. ஒரு பலம் பொருந்திய அரசை இறங்கிவரச் செய்யும் எமது போராட்டத்துக்கு மக்கள் பிரதி நிதிகள் ஆதரவு வழங்கவில்லை. எமக்கு பக்கபலமாக நின்று எவராலும் போராட முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் போராடி வருகின்றோம்.
நாட்டில் பல இடங்களிலும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கின்றன. இன்னும் எவ்வளவு காலம் நீடிக்குமோ எங்களின் வீதிப் போராட்டம்? என்று உறவினர்கள் கவலைபடத் தெரிவித்தனர்.
Post a Comment