இயக்கம் - புருஷ் விஜயகுமார்
இசை - சித்தார்த் விபின்
தயாரிப்பு - கணேஷ் ட்ரீம் பேக்டரி
வெளியான தேதி - டிசம்பர் 15, 2017
தமிழ் சினிமாவில் கற்பனைக்கு மீறிய கதைகளுடன் வரும் படங்கள் குறைவுதான். ஆனால், ஒரே வாரத்தில் கற்பனைக்கு மீறிய கதை கொண்ட படமாக நேற்று வெளியான 'மாயவன்' படத்திற்குப் பிறகு அடுத்து வந்திருக்கும் படம் 'பிரம்மா.காம்'.
மனிதனின் வாழ்க்கை கடவுளின் கையில் இருக்கிறது என்று நம்புபவர்கள் தான் பெரும்பான்மையானவர்கள். நல்ல வாழ்க்கை அமைந்தால் கடவுளுக்கு நன்றி சொல்பவர்கள், நல்ல வாழ்க்கை அமையவில்லை என்றால் கடவுளையே திட்டுவார்கள். இந்த 'பிரம்மா.காம்' படத்தில் படத்தின் நாயகனுக்கு நல்ல வாழ்க்கையை கடவுள் அமைத்துக் கொடுத்தாலும் காதல் மயக்கத்தால் அதை அவர் தவிர்க்க நினைப்பது தான் படத்தின் கதை.
விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருப்பவர் நகுல். ஆனால், அவரை விட திறமை குறைந்த அவர் உறவினரான சித்தார்த் விபின் அந்த நிறுவனத்திற்கு சிஇஓ-வாக இருக்கிறார். தன் பிறந்த நாளன்று கடவுள் பிரம்மனிடம் தன் குறைகளைக் கொட்டுகிறார் நகுல். பேஸ்புக்கில் நகுலைத் தொடர்பு கொள்ளும் பிரம்மன் ஒரே 'க்ளிக்'கில் நகுல் வாழ்க்கையை மாற்றி அவரை சிஇஓ-வாக ஆக்குகிறார். அவருக்கு மட்டுமே ஏதோ ஒன்று புதிராக நடக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், மற்றவர்கள் பார்வைக்கு அவர் நீண்ட நாட்களாகவே சிஇஓ-வாகத்தான் இருக்கிறார் என்ற உணர்வே இருக்கிறது. அதனால், மாடல் ஆஷ்னா சவேரி காதல் மீதான நகுல் காதலுக்கும் சிக்கல் வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
தன்னை விட திறமை குறைவாக உள்ள சித்தார்த் விபின் சிஇஓ-வாக இருப்பதால் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடனேயே இருக்கிறார். அவருடைய பேஸ்புக்கில் 'பிரம்மா' என்பவர் நண்பர் ஆகி அவர் வாழ்க்கையை மாற்றுகிறார். அவருக்கு மட்டுமே அவராகவும், மற்றவர்கள் கண்களுக்கு சிஇஓ-வாகவும் தெரிகிறார். நிஜத்தில் நடக்காத ஒரு கதாபாத்திரத்தைப் புரிந்து கொண்டு வழக்கம் போலவே நடித்துத் தள்ளுகிறார் நகுல். இந்தக் கதாபாத்திரத்திற்கு அந்த ஓவர் ஆக்டிங்கும் பொருந்திப் போகிறது.
ஆஷ்னா சவேரி, தோற்றத்தில் குட்டி ஐஸ்வர்யா ராய் ஆகத் தெரிகிறார். ஆனால், நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமில்லை. நகுலின் நண்பராக ஜெகன், வழக்கம் போல 'கடி'க்கிறார். ஜெகன் ஜோடியாக நடித்திருக்கும் அந்த அழகுப் பெண் உபாசானா நாயகியாகவே வலம் வரலாம்.
சித்தார்த் விபின் படத்தின் இரண்டாவது நாயகன், ஆனால் நடிப்பில் சிறப்பில்லை. ராஜேந்திரன், சோனா சம்பந்தப்பட்ட 'முடியில்லாத' நகைச்சுவை... தாங்க முடியவில்லை. பாக்யராஜ் ஓரிரு காட்சிகளில் மட்டுமே படத்தின் திருப்புமுனைக் காட்சிகளில் வருகிறார்.
சித்தார்த் விபின் இசையில் ஒரு பாடல் கூட நன்றாக இல்லை. நீது சந்திராவை ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வைக்காமல் சில காட்சிகளில் நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
ஒரு பேன்டஸி கதையை யோசித்த இயக்குனர் புருஷ் விஜயகுமார், விறுவிறுப்பான காட்சிகளையும், திரைக்கதையையும் யோசித்திருக்கலாம். மிக மிக மெதுவாக நகர்கிறது படம். நகுல் செய்யும் ஒவ்வொரு விஷயமும் 'பிரம்மா' மூலமாக அடிக்கடி பேஸ்புக்கில் அப்டேட் ஆகிறது என்பதெல்லாம் சுவாரசியமான, கற்பனைக்கு மீறிய காட்சிகள். அப்படி படம் முழுவதும் விதவிதமாக யோசித்திருந்தால் பிரம்மா.காம் பிரமாதமாக அமைந்திருக்கும்.
Post a Comment