
ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 14-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து, கடந்த 37 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பதவி விலகினார். இதையடுத்து துணை அதிபராக இருந்த எம்மர்சன் நங்காக்வா கடந்த வாரம் புதிய அதிபராக பொறுப்பேற் றார்.
இந்நிலையில் எம்மர்சன் தன்னை ஆதரித்த ராணுவ அதிகாரிகளை அமைச்சரவையில் சேர்த்துள்ளார்.
இதில் கடந்த 14-ம் தேதி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றிய பிறகு அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ தளபதி சிபுசிசோ மோயோ வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விமானப் படை தளபதி பெரன்ஸ் ஸ்ரீ, வேளாண்மை மற்றும் நிலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முகாபே பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த இரு தலைவர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிரிஸ் முத்ஸ்வாங்வா என்பவருக்கு தகவல் வெளியீ்ட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் முகாபே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலருக்கு எம்மர்சன் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளார். என்றாலும் முகாபேவுக்கு நெருக்கமானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
வேளாண் துறைக்கு பொறுப்பேற்கவுள்ள பெரன்ஸ் ஸ்ரீ, கடந்த 1980-களின் தொடக்கத்தில் அப்போதைய அதிபர் முகாபேவை எதிர்த்தவர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். இதில் அப்பாவி மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment