
ஏழரை சனி காலத்தில் பட்ட துன்பம் கணக்கில் அடங்காது. தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலை ஏற்பட்டு இருக்கும். குடும்பத்தில் பிரச்னை தலைதூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க கூடும். இந்த நிலையில் சனிபகவான் 3-ம் இடத்துக்கு மாறுகிறார். உங்கள் முயற்சி அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். குடும்ப வாழ்வில் சந்தோஷ சாரல் வீசுவதால் எப்போதும் ஜமாய்க்கலாம். தொழிலில் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்துவார்.
குரு பகவான் இப்போது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சாதகமற்ற நிலை என்றா லும், அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளது. அவர் 2018 பிப். 14ல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது சிறப்பான பலன் கிடைக்கும். மந்த நிலை மாறும். பண வரவு கூடும். பகைவர் சதி, உங்களிடம் எடுபடாது. ராகு 10-ம் இடமான கடகத்தில் இருப்பதும், கேது 4-ம் இடமான மகரத்தில் இருப்பதும் சுமாரான பலனைக் கொடுக்கும்.
2018 ஜனவரி – 2019 பிப்ரவரி சனிபகவானால் எடுத்த முயற்சி வெற்றி பெறும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனாவசிய செலவைத் தவிர்ப்பது அவசியம். குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். 2018 பிப்.14க்குப் பிறகு கணவன்-, மனைவி இடையே அன்பு பெருகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.
தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். ஆனால், நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2018 பிப்.14க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும்.
பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். 2018 பிப்.14க்குப் பின் குருவின் பலத்தால் மேன்மை உண்டாகும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் கிடைக்கும். 2018 ஏப். 9- முதல் செப். 3- வரை வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.
அப்போது வேலைப்பளு அதிகரிக்கும். கோரிக்கை விடாமுயற்சியின் பேரில் நிறைவேறும். கலைஞர்களுக்கு 2018 பிப்.14 க்கு பிறகு அவப்பெயர், போட்டி முதலியன மறையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநலசேவகர்கள் பிரதிபலன் பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும். 2018 பிப்.14க்கு பிறகு போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். குருபகவானின் வக்ர காலத்தில் படிப்பில் கவனம் தேவை. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயத்தில் அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.
பெண்கள் குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். 2018 பிப். 14க்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும். குடும்ப பிரச்னை தீர்ந்து ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தினரின் மத்தியில் நன்மதிப்பு உயரும். தொழில் செய்யும்
பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். குருபகவானின் வக்ரகாலத்தில் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கேதுவால் உடல்நலக்குறைவு ஏற்படலாம்.
2019 மார்ச் – 2020 மார்ச் ராகு 10-ம் இடத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னை கொடுத்திருப்பார். கேது 4-ம் வீட்டில் இருந்து உடல் உபாதை, பிள்ளைகளால் தொல்லை தந்திருக்கலாம். இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் விடை கொடுக்கும் காலம். கேது 3-ம் இடத்திற்கு வருவதால் நன்மை மேலோங்கும். இறைஅருளால் வாழ்வு சிறக்கும். பொன், பொருள் சேரும். உடல் உபாதை மறைந்து ஆரோக்கியம் மேம்படும். ராகு 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பானது அல்ல. உங்கள் திறமையில் இருந்த பின் தங்கிய நிலை மறையும்.
குருபகவான் 2019 மார்ச் 10-ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இது சுமார நிலை என்றாலும், அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. 2019 மே 19- முதல் அக்.27-வரை வக்கிரம் அடைந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அவரால் நன்மை கிடைக்கும். எதையும் வெற்றிகரமாக முடித்து செயலில் அனுகூலத்தை காணலாம்.ஆன்மிக ஆன்றோர் ஆசியும், அருளும் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது குறுக்கிடலாம். அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
பணியில் பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். குருபகவானின் வக்ரகாலத்தில் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும்.
பாதுகாப்பு தொடர்பான பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். புகழ், பாராட்டுக்கு குறைவிருக்காது. பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவது நல்லது.
விவசாயிகள் நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை உயரும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். உடல்நிலை மேம்படும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.
2020 ஏப்ரல் – டிசம்பர் சனிபகவானால் நன்மை தொடர்ந்து கிடைக்கும். குருபகவான், தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு மாறுவது சுமாரான நிலை தான். 2020 ஜூலை 7- முதல் அக்.14- வரை வக்கிரம் அடைந்து தனுசு ராசியில் இருந்தாலும், அவரது பார்வை பலன் சிறப்பாக உள்ளது. கணவன், -மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படலாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானத்தை காணலாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். ஆனால் அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது.
பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். பொதுநலசேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் காண முடியாது. பெண்கள் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரப்பாடல்
குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பும் அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
பரிகாரம்
● வெள்ளி ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் தீபம்
● தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு
● ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
Post a Comment