
நம் வாழ்க்கை என்பது கிரக சுழற்சிகளின் மூலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும். பல முக்கியமான விஷயங்களை சில சூட்சுமமான சக்திகள் நடத்தி வைக்கின்றன. அந்த விஷயங்கள் கிரக செயல்பாடுகள் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. திடீர் வீழ்ச்சி, கடன் சுமை, தீராத நோய் என நம்முடைய சக்திக்கு மீறி நடப்பது கிரக சேர்க்கைகள் மூலம் உண்டாகும் அமைப்பாகும்.
லக்னம், இரண்டாம் இடம், நான்காம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினோறாம் இடம் ஆகியவை நல்ல அம்சத்தில் இருந்தால் கடன்களால் தொல்லை இருக்காது, வரவும் வராது, வந்தாலும் வாழ்வாதாரத்தை பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் அவர்களின் பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச, சுபமற்ற கிரகங்கள் இருந்து தசா நடத்துவது, 6, 8, 12ம் அதிபதிகள் சம்பந்தப்படுவது போன்றவைதான் ஒருவருக்கு பல கஷ்ட, நஷ்டங்களைத் தருகின்றன. தனகாரகன் குரு, நீசம் மற்றும் பல குறைபாடுகளுடன் இருந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
நீச்ச கிரகங்களான ராகு, கேது, செவ்வாய் போன்றவை சரியான யோக அமைப்பில் இல்லாமல் சனியுடன் சம்பந்தப்படும்போது பல பாதிப்புக்கள் உண்டாகின்றன. காரணம் சனி கர்ம காரகன். நம் கர்ம கணக்கின்படி கேது மூலம் பல இன்னல்கள் நமக்கு ஏற்படுகின்றன. சந்திரன், கேது சம்பந்தப்படும்போது விரக்தி மனஉளைச்சல், அலைச்சல் என்று மனரீதியான குழப்பங்கள் மூலம் நமக்கு இடையூறுகள் வருகின்றன.
சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, கடன், பண நஷ்டம், சொத்து இழப்பு உண்டாவதற்கு அந்தக்கால கட்டத்தில் நடைபெறும் தசா புக்திகளே காரணம். 6, 8, 12ம் இடம் சம்பந்தப்பட்ட தசா புக்திகளில் பலவகையான பிரச்னைகள் தலைதூக்கும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது தவறான அணுகுமுறையால் கடனில் சிக்க வேண்டிவரும். உடல்நலமும் பாதிக்கப்படும்.
இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப, அசுப செலவுகள் வரும். குடும்பத்தில் பிரிவினை, மருத்துவ செலவுகள் உண்டாகும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும் போது சொந்த பந்தங்கள், சகோதர உறவுகளால் மனமுறிவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொத்து பிரச்னை, தாய், தாய் வழி சொந்தங்களால் மனஉளைச்சல், நிலபுலன்கள், விவசாயம், கல்வி என பல வகைகளில் கடன் வந்து பற்றும்.
ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுபசெலவுகள், சொத்துகளை மாற்றி அமைப்பது, பிள்ளைகள் மூலம் செலவுகள் அதனால் கடன் என்று வரலாம். ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நண்பர்கள், கூட்டுத்தொழிலில் விரயங்கள் வரும். மனைவி வகையில் கருத்து வேறுபாடுகள், மருத்துவ செலவுகள் இருக்கும். வழக்குகள், விபத்துகள் மூலம் நிம்மதி, இழப்பு வரும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் வழக்கு, மறதி, பொருட்கள் களவு போவது, அபராதம், எதிர்பாராத துக்க சம்பவங்கள் நிகழும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் சொத்து, பாகப்பிரிவினை தகராறுகள், நிலம் சம்பந்தமாக வழக்குகள், ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்குவது என்று இருக்கும்.
பத்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நஷ்டம், இழப்பு, கடன் என்று சுமை கூடும். உத்யோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கம், ஊர் மாற்றம், துறை சார்ந்த வழக்குகள் என்று தன, பண பிரச்னையால் கடன் விளையும்.
சாந்தி பரிகாரம்:
எல்லாவற்றிற்கும் நிவாரணம், சாந்தி, தடை நீக்குதல் என சாஸ்திரத்தில் பல பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் வழிபாட்டில் நட்சத்திரம், திதி, விரதம், விசேஷ தினங்கள் என பல நேர்த்திக் கடன்கள், வழிபாடுகள் செய்கிறோம். ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு பிரச்னைக்கும், அதை அகற்றுவதற்கான பரிகார ஸ்தலங்கள் உள்ளன. இதைத்தவிர வைதீக ஹோம பரிகாரம், யந்திர பரிகாரம் தாந்திரீக முடிவுகளை எல்லாம் சித்தர்கள், சப்தரிஷிகள் தங்கள் நாடிகளில் சாந்தி பரிகார காண்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். சில பரிகாரங்கள் பொதுவானவை. சில பரிகாரங்கள் ஒவ்வொரு ஜாதகத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமையும். கிரக அமைப்பு, கர்ம வினை, செய்வினைக்கேற்ப தனிப்பட்டவர்களுக்கு அதற்குண்டான சரியான பரிகார முறைகள் பலன் தரும்.
பலவகையான பழமரங்கள் உள்ளன. இவையெல்லாம் நமக்கு எல்லாக் காலத்திலும் பழங்களைத் தருவதில்லை. ஒவ்வொரு மரமும் அதற்குண்டான கால, நேர, பருவம் வரும்போதுதான் பூத்து, காய்த்து, கனிகளைத் தருகிறது. அதைப்போலவே நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவற்றிற்கும் வேளை என்று ஒன்று வரவேண்டும். அந்த நேரத்தை நமக்கு அமைத்து வழிகாட்டுவதும் கிரகங்களே.
பொதுவான பரிகாரங்களில் நமக்கு கடன்சுமை அதிகமாக இருந்தால் அந்தக் கடனில் அசல் தொகையில் ஒரு பகுதியை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரை, ராகு காலம் அல்லது எமகண்டத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்தக் கிழமையில் வரும் குளிகன் நேரத்திலும் கடன் தொகையை திருப்பி செலுத்தலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியிலும் கடனை பைசல் செய்யலாம்.
பொதுவாக சுப விஷயங்களுக்கு சித்த யோகம், அமிர்த யோகம் பார்ப்பார்கள். ஆனால், நாம் வாங்கியுள்ள கடனை முடிவுக்குக் கொண்டுவர மரண யோகம் மிகச் சிறந்தது. மரண யோகம் இருக்கும் நாளில் நீங்கள் ஒரு பகுதி கடனை திருப்பி செலுத்தினால் கடன் சுமை குறைய நல்ல வழி பிறக்கும்.
மரண யோகத்தில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. பொன், பொருளை இரவில் கொடுக்கக் கூடாது. இதைத் தவிர மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது. அது அவரவர் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பார்த்து செய்யக்கூடிய பரிகாரம். பணம் வீணாக செலவு ஆவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திருதியை அன்று இயன்ற அளவு அன்னதானம் செய்யலாம்.
வளர்பிறை வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திர நாட்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு போர்வை வாங்கித் தரலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று பசுமாட்டிற்கு கீரை, பழங்கள் தரலாம்.
பொதுப் பரிகாரங்கள் தவிர ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பின்படி எந்தக் கிரகக் கோளாறினால் ருண, ரோக, சத்ரு தொல்லை ஏற்பட்டுள்ளது, எந்த தசாவினால் பாதிப்பு உண்டாகி இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்குண்டான பரிகாரத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கடன் விரைவில் தீரும்.
Post a Comment