Ads (728x90)

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல் (வயது 40). 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 178 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்களையும், 64 டி20 போட்டிகளில் 85 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். 2014-ம் ஆண்டு இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு இவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் தெரிவித்தது. இதேபோன்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே அஜ்மல் மீது சுமத்தப்பட்டிருந்ததால், அதன் பிறகு அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சயீத் அஜ்மல் கூறியிருப்பதாவது:

இளம் வீரர்களுக்கு வழி விடுவதற்காக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன். சமீப காலமாக பாகிஸ்தான் அணியும், உள்ளூர் கிரிக்கெட் அணிகளும் என்னை ஒரு கூடுதல் சுமையாக கருதி வந்ததுபோல் உணர்கிறேன். என் மரியாதையை இழக்க நான் விரும்பவில்லை.

எனவே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கனத்த இதயத்துடன் ஓய்வு பெறுகிறேன். என் பந்துவீச்சு முறை பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சந்தேகம் எழுப்பியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு ஆதரவாக வாதாடி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எனக்கு வருத்தம் அளித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்காக வாதாடி இருந்தால் நான் திருப்தி அடைந்திருப்பேன். நான் சரியான முறையிலேயே பந்து வீசியதாக நம்புகிறேன்

Post a Comment

Recent News

Recent Posts Widget