சென்னை டு சிங்கப்பூர் - விமர்சனம் : ஜாலி பயணம்
நடிப்பு - கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன், அஞ்சு குரியன், ஷிவ் கேசவ்
இயக்கம் - அப்பாஸ் அக்பர்
இசை - ஜிப்ரான்
தயாரிப்பு - காமிக்புக் பிலிம்ஸ்
வெளியான தேதி - டிசம்பர் 15, 2017
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ்நாட்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டத் திரைப்படங்கள்தான் 95 சதவீதம் வரும். சில சமயங்களில்தான் வெளிநாடுகளில் நடக்கும் கதையைக் கொண்ட படங்கள் வரும். அப்படி வரும் படங்களில் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்கள் அதிகமாக வரும்.
இந்தப் படத்திற்கு 'சென்னை 2 சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துவிட்டதால், சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு நகரும் கதை என்பதை மட்டும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் கோகுல் ஆனந்த், சென்னையில் ஒரு தயாரிப்பாளரால் ஏமாற்றப்படுகிறார். நண்பன் உதவியுடன் சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளரை சந்திக்கச் செல்கிறார். ஆனால், அந்தத் தயாரிப்பாளர் திடீரென விபத்தில் சிக்கிவிடுகிறார். அதனால், தவிக்கும் கோகுல், பாஸ்போர்ட்டையும் தொலைத்துவிடுகிறார். அந்த சமயத்தில் சிங்கப்பூரில் வசிக்கும் டிவி ஒன்றின் ஒளிப்பதிவாளரான ராஜேஷ் பாலச்சந்திரன், கோகுலுக்கு உதவி செய்து அவருடனேயே தங்க வைக்கிறார்.
கோகுலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ராஜேஷ், கோகுலுக்கு வேறு தயாரிப்பாளரை சந்திக்க வைக்கிறார். அதே சமயம், பாஸ்போர்ட் அலுவலகத்தில் அஞ்சு குரியன்-ஐ சந்திக்கும் கோகுல், அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், அந்த காதலை அஞ்சு ஏற்க மறுக்கிறார். சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற கோகுல் ஆனந்த், படம் இயக்கினாரா, காதலில் வெற்றி பெற்றாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களால் தயாரித்து, இயக்கி, நடிக்கப்படும் சில படங்கள் இதற்கு முன்பு தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ளன. இந்தப் படமும் சிங்கப்பூர் கூட்டு முயற்சியுடன் தயாரிக்கப்பட்ட படம்தான். அதனால், தமிழ்நாட்டு தமிழ்ப் படமாகவும் இல்லாமல், சிங்கப்பூர் தமிழ்ப் படமாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் இருக்கிறது. இருந்தாலும் ஒரு கலகலப்பான கதையை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் அப்பாஸ் அக்பர்.
திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் இளைஞன் ஆக கோகுல் ஆனந்த். அந்தக் கதாபாத்திரத்தில் இயல்பாய் நடித்து ரசிக்க வைக்கிறார். காதலும், லட்சியமும் அவரை அழுத்தும் காட்சிகளில் அவருடைய நடிப்பு உணர்வுபூர்வமாய் அமைந்துள்ளது.
படத்தின் கலகலப்புக்குக் காரணமாக இருப்பவர் ராஜேஷ் பாலச்சந்திரன். கோகுல் ஆனந்திற்கு அடைக்கலம் கொடுத்து அவருக்காக எதையும் செய்பவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் முயற்சித்தால் பல கதாபாத்திரங்களில் நடிக்கலாம். கலகலப்பும், காமெடியும் அவருக்குள் இயல்பாகவே இருப்பது போலிருக்கிறது.
படத்தின் கதாநாயகியாக அஞ்சு குரியன். உள்ளுக்குள் அவ்வளவு பெரிய சோகத்தையும், கஷ்டத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு இருக்கும் கதாபாத்திரம். கோகுல் ஆனந்தின் காதலை கடைசி வரை ஏற்றுக் கொள்ளாமல் தவிக்க விடுகிறார். தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு அழகான வரவு அஞ்சு குரியன்.
தயாரிப்பாளராக வந்து வில்லனாகிறார் ஷிவ் கேசவ். கிளைமாக்சில் 'பாப்பா பிளாஸ்ட்' ஆக வரும் எம்சி ஜெஸ் மற்றும் அவரது அடியாட்கள் செய்யும் 'தாதாயிசம்' சிரிப்பு, கொஞ்சம் சிறப்பு.
ஜிப்ரான் இசையில் 'வாடி..வாடி...' பாடல் ஏற்கெனவே யு டியூபில் ஹிட்டான பாடல். சிங்கப்பூரின் அழகை பரந்து விரிந்து ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்ல முத்து.
படம் தயாரிக்க சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞனின் கதை என ஒரு வரிக் கதைதான் படம். படத்தில் வேறு எந்த விறுவிறுப்போ, திருப்புமுனையோ இல்லாத ஒரு திரைக்கதையாக இருந்தாலும் ரிலாக்ஸ் ஆக ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த 'சென்னை 2 சிங்கப்பூர்' பிடிக்கலாம்.
Post a Comment