Ads (728x90)

பேரூர்தோடு: பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

காளையை கட்டிய மரம் : காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது. இங்கே சிவாலயம் ஒன்று இருக்கிறது. காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப் பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.

அழுதாநதி: காளைகட்டியிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. அழுதாநதிக் கரை. மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம். அதனால் அழுதா நதியில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம். 

பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது. மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். 

மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர். இங்குள்ள தலத்தில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஐயப்பனின் விக்கிரகங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் தரிசித்து ஐயப்பனின் பரிபூரண அருளைப் பெற்றுச் சிறக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget