
உலக நாடுகள், ஐ.நா.வின் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வடகொரியா தன்னிச்சை யாக செயல்பட்டு வருகிறது. ஏவுகணை, அணுஆயுத சோதனை நடத்தி வந்த வடகொரியா கடந்த 2 மாதங்களாக அமைதி காத்தது. ஆனால், அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கி அழிக்கும் திறன்படைத்த அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
இதற்கு ஐ.நா., அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சீனா, ரஷ்யா உட்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியதாவது:
உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் வடகொரியாவுடன் எல்லா நாடுகளும் உடனடியாக பொருளாதார, தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும். கொரிய தீபகற்ப பகுதியில் ஏற்கெனவே பதற்றம் நிலவுகிறது. அந்தப் பதற்றம் போராக மூளும் சூழ்நிலை உருவானால், வடகொரியாவை அமெரிக்கா முற்றிலும் அழித்துவிடும். போர் வந்தால் அதற்கு வடகொரியாவின் ஏவுகணை சோதனை போன்ற நடவடிக்கைகள்தான் காரணமாக இருக்கும். அந்த சூழ்நிலையில் எந்த தவறும் நேராத வகையில், வடகொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது.
வடகொரியாவுடன் அமெரிக்கா போரை விரும்பவில்லை. ஆனால், வடகொரியாவின் நடவடிக்கைகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
இவ்வாறு நிக்கி ஹாலே எச்சரித்தார்.
இதற்கிடையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய பிறகு, உடனடியாக சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ஐ.நா. பொருளாதார தடை விதித்தாலும் வடகொரியாவுக்கு சீனா மூலம் ஓரளவு பொருளாதார உதவிகள் கிடைத்து வருகின்றன. இப்போதைய ஏவுகணை சோதனைக்குப் பிறகு வடகொரியாவுக்கு நெருக்கடி கொடுக்கும்படி ஜி ஜின்பிங்கை ட்ரம்ப் கேட்டுக் கொண்டார்.
Post a Comment