Ads (728x90)

“மொரகஹகந்த திட்டத்தை இன்று தமது சாதனை என்று நல்லாட்சி அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், உண்மையில் இது எனது ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திட்டம்.

ராஜகிரிய மேம்பாலமும் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டமே” என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசு பதவியேற்ற மூன்றாவது ஆண்டு இன்று நிறைவுறும் நிலையில், அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி அரசின் சாதனைகள்தான் இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமை நெருக்கடி. ஆட்சிப் பொறுப்பேற்ற 36 இந்த மாதங்களில் மொத்தமாக 14.6 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் இருந்து கடனாகப் பெற்றிருக்கிறது. இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசும் வாங்கியிராத பாரிய தொகை இது.

“மொரகஹகந்த திட்டம் 2005ஆம் ஆண்டு நான் வெளியிட்ட ‘மஹிந்த சிந்தனை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான நிர்மாண வேலைகள் எனது ஆட்சிக் காலத்தில், 2007ஆம் ஆண்டு ஆரம்பமாகிவிட்டது.

“ராஜகிரிய மேம்பாலம் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் உட்பட, பொல்கஹவெல மற்றும் கணேமுல்ல மேம்பாலங்களுக்கான திட்டங்களும் எனது ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டன. இவற்றுக்கான எனது அனுமதி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டது. அத்துடன், அத்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளையும் அப்போதே செய்திருந்தேன்.”

இவ்வாறு அவரது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget