
சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 10,105 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஸ்பெயினின் ரபேல் நடால் 9,760 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார். குரோஷியாவின் மரின் சிலிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், பெல்ஜியத்தின் டேவிட் கோபின், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல் போட்ரோ, அமெரிக்காவின் ஜேக் சோக் ஆகியோர் 3 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
இந்திய வீரர்களில் 23 வயதான ராம்குமார் ராமநாதன் 7 இடங்கள் முன்னேறி 133-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் யுகி பாம்ப்ரி 4 இடங்கள் பின்தங்கி 105-வது இடத்திலும் சுமித் நாகல் 4 இடங்கள் பின்தங்கி 220-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான குணேஷ்வரன் 10 இடங்கள் முன்னேற்றம் கண்டு 232-வது இடத்தை பிடித்துள்ளார். இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 20-வது இடம் வகிக்கிறார். திவிஜ் சரண் 3 இடங்களை இழந்து 54-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 3 இடங்களை இழந்து 52-வது இடத்திலும் உள்ளனர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ருமேனியாவின் சிமோனா ஹாலப் 7,965 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அதேவேளையில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, உக்ரைனின் ஸ்விட்டோலினா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளனர். இந்திய வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா 250-வது இடத்திலும், கர்மான் கவுர் தாண்டி 281-வது இடத்திலும் உள்ளனர். இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
Post a Comment