
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறியது.
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்களுடன் (12 ஓவர்) வலுவான நிலையில் இருந்தது. இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் கேப்டன் மோர்கன் (7 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0), ஜோ ரூட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளீகரம் செய்ய இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது.
அவரது மாயாஜால சுழற்பந்து வீச்சால் 200 ரன்களை நோக்கி பயணித்த இங்கிலாந்தின் ரன்வேகம் ஒரேயடியாக சரிவுக்குள்ளானது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 69 ரன்களும், ஜாசன் ராய் 30 ரன்களும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 4 ரன்னில் போல்டு ஆனாலும், 2–வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் அணியை நிமிர வைத்தனர். 17 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்த ராகுல், அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து கட்டினார். வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட்டின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் சர்மா 32 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். அபாரமாக ஆடிய ராகுல் தனது 2–வது சதத்தை நிறைவு செய்தார். அதன் தொடர்ச்சியாக கோலி, பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக ருசித்த 7–வது வெற்றி இதுவாகும். லோகேஷ் ராகுல் 101 ரன்களுடனும் (54 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2–வது 20 ஓவர் போட்டி கார்டிப்பில் நாளை நடக்கிறது.
Post a Comment