
லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் (1–1 என்ற கணக்கில் டிரா) சற்று தடுமாறிய பிரேசில் அணி அதன் பிறகு எழுச்சி கண்டது. அடுத்த லீக் ஆட்டங்களில் கோஸ்டாரிகா, செர்பியா மற்றும் 2–வது சுற்றில் மெக்சிகோ ஆகிய அணிகளை தலா 2–0 என்ற கோல் கோல் வித்தியாசத்தில் போட்டுத்தாக்கியது.
பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் பிரேசில் அணியில் நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்டன் தியாகோ சில்வா, வில்லியன், மார்செலோ, பவுலினோ என்று ஒரு நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. இதில் நெய்மார், காட்டினோ கூட்டணி எதிராளியிடம் இருந்து பந்தை தட்டிப்பறித்து நொடிப்பொழுதில் பந்தை கோலாக மாற்றுவதில் கில்லாடிகள்.
மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் காயம் அடைந்தது போல் போலியாக நடித்ததாக பலமான விமர்சனங்கள் கிளம்பின. ஆனால் அதை பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாத நெய்மார், எதிரணியினர் தன்னை வீழ்த்த தீட்டும் வியூகங்களை எப்படி உடைத்தெறிவது என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இரண்டு மஞ்சள் அட்டை பெற்ற கேஸ்மிரோ இந்த ஆட்டத்தில் ஆட முடியாதது பிரேசிலுக்கு சற்று பின்னடைவாகும்.
Post a Comment