
இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் டேனியலி வியாட் (43 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (25 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது.
பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியர்கள் பீல்டிங்கில் சோடை போனார்கள். பீல்டிங்கில் பல முறை பந்தை பிடிக்க தவறியதுடன், 5 கேட்ச் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதில் கச்சிதமாக செயல்பட்டு இருந்தால் இங்கிலாந்து மூன்று இலக்க ஸ்கோரை தொட்டிருக்காது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே கார்ட்னெர் 3 விக்கெட்டுகளும், ஜார்ஜியா வார்ஹம், மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனைகளான விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே 22 ரன்னிலும், பெத் மூனி 14 ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணி 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் (7.1 ஓவர்) எடுத்திருந்தது.
இதன் பின்னர் ஆல்–ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெரும் (33 ரன், ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேப்டன் மெக் லானிங்கும் (28 ரன், 3 பவுண்டரி) இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் உச்சிமுகர்ந்தது. ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்வது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2010, 2012, 2014–ம் ஆண்டுகளிலும் வென்று இருந்தது.
ஆல்–ரவுண்டராக ஜொலித்த ஆஷ்லே கார்ட்னெர் ஆட்டநாயகி விருதையும், இந்த தொடரில் மொத்தம் 2 அரைசதங்கள் உள்பட 225 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே தொடர் நாயகி விருதையும் பெற்றனர்.
Post a Comment