வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 17 பேர் இறந்தனர்.வங்கதேச நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நான் மக்களை நம்புகிறேன். தங்கள் வாழ்வு வளமாக மக்கள் எங்களை தேர்ந்தெடுப்பார்கள்’’ என்றார். வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பெண்களும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணியுடன் முடிந்தது.
தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சிக்கும் ஊழல் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சிக்கும் முக்கிய போட்டி நிலவுகிறது. தேர்தலில் பல இடங்களில் மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. முறைகேடுகள் தொடர்பாக வேட்பாளர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் அவாமி லீக் கட்சியினருக்கும் வங்கதேச தேசியவாத கட்சியினருக்கும் மோதல் சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நிலைமையை கட்டுப்படுத்த ராணுவத்தினரும் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment