Ads (728x90)

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 8.29 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம், ஆங்கரேஜ் நகருக்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் 40.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து, 40 முறை அதிர்வுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

நில நடுக்கத்தால் கடலோர பகுதிகளில் குறிப்பாக குக் இன்லெட் மற்றும் தெற்கு கெனாய் தீபகற்ப பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் பெருத்த சேதம் அடைந்தன. நில நடுக்கம் ஏற்பட்ட போது கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் பீதியில் வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நில நடுக்கத்தை பேரழிவாக அலாஸ்கா மாகாண கவர்னர் பில் வாக்கர் அறிவித்துள்ளார். மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி டிரம்பும் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ அலாஸ்கா மக்கள் பெரிய அளவிலான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு உதவுகிற, பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகளின் வழிநடத்துதலை பின்பற்றுங்கள்” என கூறி உள்ளார்.

நில நடுக்கத்தால் ஆங்கரேஜ் நகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget