Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சியின் பிச்சையில் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்டம் போடுகின்றார். அவரின் இந்த ஆட்டம் விரைவில் அடங்கும என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் பிரதமர் பதவியை எனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக சத்தியம் வழங்கினார். எனினும், அந்தச் சத்தியத்தை - வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவர் செயற்படுகின்றார்.
என்னால் நாடு சீரழிந்தது என்று வாய்கூசாமல் ஜனாதிபதி கூறுகின்றார். உண்மையில் யாரால் நாடு சீரழிந்து போகின்றது என்பது பாமர மக்களுக்குக்கூடத் தெரியும்.

என்னை விமர்சிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டார்.

அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும் நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள். இறுதியில் ஜனநாயகமே வெல்லும். சர்வாதிகாரம் பொசுங்கிப் போகும். ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதி.

நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவோம். நாட்டை முன்னேற்றுவோம். மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget