பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினி, அஜித் நடித்த படங்கள் ஜனவரி 10-ம் தேதி வெளியாகின. இரண்டு படங்களில் வசூலைக் குவித்த படம் எது என்ற போட்டி ரசிகர்களுக்கிடையே எழுந்துள்ளது. 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய 2 படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இரு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தாலும் பொங்கல் பந்தயத்தில் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் பேட்ட திரைப்படம் வசூலில் முதலிடத்தில் இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அஜித்தின் விஸ்வாசம் வசூலில் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்நிலையில் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்ட படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 3 மொழிகள், 1063 திரையரங்குகள், 34 நாடுகள் என இடம்பெற்றிருந்தன. மேலும் அந்த பதிவில் "தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளுக்கு அதிகமாக பேட்ட வெளியானது. 2-வது நாள் முதலே திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக 'விஸ்வாசம்' படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தின் மக்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் உண்மை என்ன என்பது தெரியும். ஏன் அனாவசியமாக போட்டியையும் மோதலையும் உருவாக்க முயல்கிறீர்கள்? தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பார்த்தால் தெளிவடையலாம். நம் இருவரது படங்களும் எப்படி வசூலித்துள்ளன என்பதைப் பார்ப்போம்” என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக 'விஸ்வாசம்' படம் 541 திரையரங்குகள், 31 நாடுகளில் வெளியீடு என க்யூப் நிறுவனத்தின் தகவலை வைத்து படக்குழு போஸ்டர் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment