Ads (728x90)

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான 107-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 6 முறை இந்த பட்டத்தை வென்ற நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், நம்பர் ஒன் வீரரும், 6 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் சூப்பர் பார்மில் உள்ள ஜோகோவிச்சுக்கே மகுடம் சூடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். பெடரர் கூட ஜோகோவிச்சுக்கே வாய்ப்பு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

ஜோகோவிச் முதலாவது சுற்றில் தகுதி நிலை வீரரான அமெரிக்காவின் மிட்செல் குருஜெரை சந்திக்கிறார். 2-வது சுற்றில் ஜோகோவிச், முன்னணி வீரர் பிரான்சின் சோங்காவை சந்திக்க வேண்டி இருக்கும்.

7-வது பட்டத்துக்கு குறி வைத்துள்ள 37 வயதான பெடரர் தனது சவாலை உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்தோமினுடன் தொடங்குகிறார். தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு விட்ட ரபெல் நடால் முதல் சுற்றில், உள்ளூர் வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்துடன் மோதுகிறார்.

ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி முறையாக கால்பதிக்கும் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, முதல் ரவுண்டில் ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுத்தை எதிர்கொள்கிறார். ஒற்றையர் பிரிவில் ஆடும் ஒரே இந்தியரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், குரோஷியாவின் மரின் சிலிச், தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ரஷியாவின் கரென் கச்சனோவ், கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ஆஸ்திரியாவின் டொமினிக் திம், ஜப்பானின் நிஷிகோரி உள்ளிட்டோரும் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜாம்பவானான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), 2-ம் நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.

குழந்தை பெற்றுக்கொண்டு களம் திரும்பிய செரீனா வில்லியம்ஸ், கடந்த ஆண்டில் எந்த ஒரு கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை. அந்த குறையை போக்க தன்னை தீவிரமாக தயார்படுத்தியுள்ள அவர் இங்கு கோப்பையை கையில் ஏந்தினால், அதிக கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றியவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்து விடுவார். செரீனா முதல் சுற்றில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில் தனது முதல் சுற்றில் எஸ்தோனியாவின் கனேபியுடன் மோதும் ஹாலெப் 4-வது சுற்றில் செரீனாவை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது.

வருகிற 27-ந்தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.317 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.20¾ கோடியுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10½ கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகும் ஜோடிக்கு ரூ.3¾ கோடி அளிக்கப்படும்.

ஆஸ்திரேலிய ஓபனில் இதுவரை கடைசி செட் சமநிலையில் (6-6) இருந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் நீடித்துக் கொண்டே இருக்கும். அந்த நிலைமை இனி கிடையாது. முதல் முறையாக இந்த சீசனில் கடைசி செட்டில் ‘டைபிரேக்கர்’ முறை அறிமுகம் ஆகிறது.

போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி மாலை வரை தொடர்ந்து நடைபெறும். சோனி சிக்ஸ், சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் பெடரர், நடால், கெர்பர், நடால், ஆன்டி முர்ரே, வோஸ்னியாக்கி, ரஷியாவின் மரிய ஷரபோவா உள்ளிட்டோர் களம் இறங்க இருக்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget