
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என சமனில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், கலீல் அகமது நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், தமிழகத்தின் விஜய் ஷங்கர், சகால் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் லியான், பெஹ்ரன்டர்ப்பிற்குப் பதில் ஆடம் ஜாம்பா, ஸ்டான்லேக் இடம் பெற்றனர். லேசான மழை காரணமாக போட்டி துவங்க 10 நிமிடம் தாமதம் ஆனது.
2 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வர, போட்டி நிறுத்தப்பட்டது. 20 நிமிடத்துக்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது. ஷமி பந்தில் பவுண்டரி அடித்த அலெக்ஸ் கேரி (5), புவனேஷ்வர் 'வேகத்தில்' சிக்கினார். சகால் வீசிய தனது முதல் ஓவரில் ஷான் மார்ஷ் (39), கவாஜாவை (34) அவுட்டாக்கினார். தொடர்ந்து அசத்திய இவர் ஸ்டாய்னிசையும் (10) வெளியேற்றினார். முகமது ஷமி வேகத்தில் மேக்ஸ்வெல் (26) சிக்கினார். ரிச்சர்ட்சன் (16), ஜாம்பா (8) சகாலிடம் சரிந்தனர். ஸ்டான்லேக் (0) போல்டாக, ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுழலில் அசத்திய சகால் 6, புவனேஷ்வர், முகமது ஷமி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (9), தவான் (23) அதிர்ச்சி தந்தார். கோஹ்லி 46 ரன் எடுத்தார். அடுத்தடுத்து அவுட் வாய்ப்பில் இருந்து தப்பிய தோனி ஒருநாள் அரங்கில் 70வது அரைசதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் அடித்த 8வது அரைசதம் இது. இவருடன் இணைந்த கேதர் ஜாதவ் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். ஸ்டாய்னிஸ் பந்தில் பவுண்டரி அடித்த கேதர் ஜாதவ், தனது 4வது அரைசதம் எட்டினார்.
இருவரும் 4வது விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கும் மேல் சேர்க்க இந்திய அணி வெற்றியை நெருங்கியது. கடைசியில் கேதர் ஜாதவ் ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க இந்திய அணி 49.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என முதன் முறையாக கைப்பற்றியது. தோனி (87), கேதர் ஜாதவ் (61) அவுட்டாகாமல் இருந்தனர்.
Post a Comment