Ads (728x90)

வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சி, இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார்.

ராணுவத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருந்து, மதுரோவை வெளியேற்ற போராடும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வெனிசூலாவில் தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை என பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் குவைடோ வெளியிட்ட ஒரு வீடியோ பதிவு வைரலாக பரவியது. முதல் முறையாக ராணுவ வீரர்களுடன் தோன்றி பேசிய அவர், அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை வீரர்கள் ஏற்றுக்கொண்டு, மதுரோவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருப்பதாகவும், மதுரோவை வெளியேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆயுதப்படையினர் மதுரோவிற்கு எதிராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்ட கராகஸ் ராணுவ தளத்தின் அருகில், குவைடோவின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து குவைடோவின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். ராணுவ தளத்திற்கு வெளியே குவைடோவின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் உருவானது. அவர்களை ராணுவ வீரர்களும், இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மற்ற இடங்களிலும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களை போலீசார் மற்றும் கலவர தடுப்பு பிரிவு போலீசார் விரட்டியடித்தனர்.

ஆனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துவிட்டதாக அதிபர் மதுரோ தெரிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அவர், ராணுவத்தில் ஒரு சிறு குழுவினர் அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதிக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தீவிர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget