
சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.
அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார்.
அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இத்லிப்பில், அல் பாக்தாதி பதுங்கி இருக்கிறார் என உளவு அமைப்பின் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அமெரிக்க ராணுவ படைகள் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டன. இதில், அல் பாக்தாதி கொல்லப்பட்டு உள்ளார் என சிரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன் இந்த தகவலை ஈரான் அரசுக்கும் தெரிவித்தது.
இந்நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க படை மிக சிறப்பாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழிக்கவில்லை. இந்த தாக்குதலில் பக்தாதியின் பாதுகாவலர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் பலர் மரணம் அடைந்தனர்.
அதில் அபு பக்கர் அல் பாக்தாதியும் ஒருவர். உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக், குர்து படைகளுக்கு நன்றி என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment