
தனது பதவி காலத்திலேயே இந்தியாவில் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அரங்கேற்றி விட வேண்டும் என்பதே அவரது ஆசை. இதற்காக முதலில் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பேசி, அவரை ஒப்புக்கொள்ளச் செய்தார்.
அதைத் தொடர்ந்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன், தலைமை செயல் அதிகாரி நிஜாமுத்தின் சவுத்ரி ஆகியோரிடம் பேசிய கங்குலி, ‘வங்காளதேச அணி இந்தியாவுக்கு வந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் ஒன்றை பகல்-இரவு போட்டியாக நடத்த விரும்புகிறோம். அதற்கு நீங்கள் உடன்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள், தங்களது அணி வீரர்கள், பயிற்சியாளரிடம் கலந்து ஆலோசித்து முடிவை சொல்வதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை வங்காதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த தகவலை சவுரவ் கங்குலி நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இந்தியா-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் (நவ. 14-18) நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நவம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக நடத்தப்படுகிறது. கொல்கத்தா கங்குலியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் கால்பதிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டி மின்னொளியின் கீழ் நடப்பதால் இதற்கு என்று பிரத்யேகமான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது. டெஸ்ட் போட்டியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்ய வேண்டும், விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்ற நோக்குடன் முதல் முறையாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை 11 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடியுள்ளன. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 பகல்-இரவு டெஸ்டில் விளையாடி அவை அனைத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியை பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வரும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது. ஆனால் அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.
மின்னொளி டெஸ்டில் பந்து பழசான பிறகு அதை துல்லியமாக கணித்து விளையாடுவதில் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். இதனால் தான் இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினர். இப்போது கங்குலியின் முயற்சியால் இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி சாத்தியமாகியுள்ளது.
வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறுகையில், ‘ஒரு பயிற்சியாளராக நானும், அணியின் மூத்த வீரர்களும் இது நமக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு என்று நினைக்கிறோம். இந்திய அணி இதற்கு முன்பு இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடியதில்லை. நாங்களும் இந்த பந்தில் ஆடியதில்லை. அதனால் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக இருக்கும். இரண்டு அணிக்குமே இது புதிய அனுபவமாக இருக்கும். அதை நினைத்து பரவசமடைகிறோம்.
உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு எதிராக மின்னொளியில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சவாலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். அதே சமயம் பகல்-இரவு டெஸ்டில் பங்கேற்கும் போது உள்ள ஒரு சில கவலைக்குரிய அம்சங்களையும் வீரர்கள் எடுத்து கூறினர். குறிப்பாக போட்டிக்கு தயாராகுவதற்கு போதுமான அவகாசம் இல்லையே என்று ஆதங்கப்பட்டனர். ஆனால் இதே நிலைமை தான் இந்திய அணிக்கும். அவர்களுக்கும் இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்பது முதலில் தெரியாது.
நான் ஏற்கனவே தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த போது இளஞ்சிவப்பு நிற பந்தில் அந்த அணி விளையாடி இருக்கிறது. எனக்கு கிடைத்த அந்த அனுபவம் வங்காளதேச அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
பகல்-இரவு டெஸ்ட் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவதை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருப்பது நல்ல முன்னேற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பகல்-இரவு போட்டி அவசியமாகும். இதன் மூலம் இப்போட்டியை பார்க்க நிறைய ரசிகர்களை மைதானத்திற்கு வருகை தருவார்கள் என்று நம்புகிறேன்.
இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சிரமப்படுவார்கள் என்று சொல்கிறீர்கள். ‘ஸ்பிரே’ அடித்து பனிப்பொழிவின் தாக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். ஏற்கனவே ஒரு நாள் போட்டியின் போது ‘ஸ்பிரே’ பயன்படுத்தி இருக்கிறோம். முதலாவது டெஸ்டில் எஸ்.ஜி. வகை பந்து பயன்படுத்துகிறோம். எனவே 2-வது டெஸ்டுக்கும் அதே வகை பந்து தான் பயன்படுத்தப்படும்.’ என்றார்.
இந்த டெஸ்ட் போட்டியின் போது ஒலிம்பிக் சாம்பியன்களான துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோரை அழைத்து கவுரவிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
Post a Comment