Ads (728x90)

இலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நபர்களை பதவிகளிலிருந்து இடைநிறுத்தவும், பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர அதன் பிற கடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டப் பிரிவு 7031 (சி) இன் வெளிநாட்டு அதிகாரிகள், மனித உரிமை மீறல் அல்லது குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாக நம்பகமான தகவல்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் வைத்திருக்கும் சந்தர்ப்பங்களில், அந்த நபர்களும் அவர்களது நேரடியான குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துர்நடத்தைகளுக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அக்கறை கொண்டுள்ளது. அத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுப்புக் கூறல் நடவடிக்கைக்கு உள்படுத்துவதற்கு எங்கள் ஆதரவு வழங்கப்படும்.

இலங்கை அரசுடனான எங்களுடைய நல்லுறவு மற்றும் இலங்கை மக்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதன் பாதுகாப்புப் படைகளை மறுசீரமைப்புக்கு உதவுவதற்கு அமெரிக்கா உறுதியுடன் உள்ளது என்று அந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget