Ads (728x90)

'

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தில் நாயகனை ஒரு திருடனாக காட்டினார்கள். இந்த 'அசுரகுரு' படத்திலும் நாயகனை ஒரு திருடனாகக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஆரம்பத்தில் அந்தப் படத்தின் ஞாபகமும் வந்துவிட்டுத்தான் போகிறது.

நாயகன் எதற்காகத் திருடுகிறான் என்பதற்கு சிறு வயதில் இருந்தே இருக்கும் ஒரு பழக்கம் என்று சொல்லிவிடுகிறார்கள். ஏறக்குறைய சைக்கோ திருடன் போலத்தான். வித்தியாசமான கதை என்றெல்லாம் இல்லை, வழக்கமான ஒரு கதைதான், அதை கொஞ்சம் பரபரப்பாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தீப். ஆனாலும், வழக்கமான தமிழ் சினிமா காட்சிகள் தான் படத்தில் நிறைந்திருக்கிறது.

விக்ரம் பிரபு, ஓடும் ரயிலில் துளையிட்டும், சிலர் கடத்தும் ஹவாலா பணத்தையும், டபுளிங் செய்பவர்களிடம் இருந்தும் பணத்தைக் கொள்ளை அடிக்கிறார். அவற்றைக் கண்டுபிடிக்க காவல் துறை அதிகாரியான சுப்புராஜ் நியமிக்கப்படுகிறார். அதே சமயம், தன் ஹவாலா பணத்தைப் பறி கொடுத்த நாகி நீடு, தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் தன் பணத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்கிறார். அங்கு வேலை செய்யும் மகிமா நம்பியார் அதற்கான விசாரணையில் இறங்கி, விக்ரம் பிரபு தான் அதைச் செய்தார் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

திருடுவது விக்ரம் பிரபுவுக்கு ஒரு நோய் மாதிரிதான் என்று சொல்லி அவரது திருட்டை நோயாளி திருட்டு என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். தனது திருட்டை விக்ரம் பிரபு எங்கும் நியாயப்படுத்தவில்லை. ஆனாலும், கோடிக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்து வீட்டில் அலங்காரம் செய்து வைப்பது நம்பும்படியாக இல்லை. 'அசுரகுரு' எனப் பெயரை வைத்துவிட்டு அதற்கேற்றபடி அவர் அசுரத்தனமாக எதையாவது செய்கிறார் என்றாவது காட்டியிருக்கலாம். ஆனால், சர்வசாதாரணமாகவே திருட்டையெல்லாம் செய்கிறார்.

தனியார் துப்பறியும் நிபுணர் ஆக மகிமா நம்பியார். அவரது கதாபாத்திரம் எதற்கு சிகரெட் பிடிக்கிறது என்றே தெரியவில்லை. அவரும் அதை பயந்து கொண்டே, பிடிக்கத் தெரியாமல் பிடிக்கிறார். இப்படியெல்லாம் காட்டினால் மாடர்ன் பெண்ணாக ஒரு கதாபாத்திரம் மாறிவிடுமா ?.

படத்தின் வில்லன் சுப்பராஜ். ஆரம்பத்தில் அவரை நேர்மையான காவல்துறை அதிகாரி என்கிறார்கள். ஆனால், அவர்தான் கடைசியில் வில்லனாக மாறப் போகிறார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.

விக்ரம் பிரபுவின் நண்பனாக ஜெகன். உதவி செய்வதுடன் அவருடைய வேலை முடிந்துவிடுகிறது. யோகி பாபு டீக்கடை வைத்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்கவில்லை. எதற்காக இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

படத்தில் இருக்கும் ஒரு சில பாடல்களில் ஒன்று கூட ரசிக்கும் மாதிரி இல்லை. பின்னணி இசையை சைமன் கே கிங் செய்திருக்கிறார். ஏதோ கொஞ்சமாக ஒப்பேற்றியிருக்கிறார்.

நல்ல கதைகளையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் கொண்ட படங்களை அடிக்கடி பார்க்க முடியாது. ஆனால், இம்மாதிரியான சுமாரான படங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. தமிழ் சினிமா எப்போது மாறுமோ ?.

Post a Comment

Recent News

Recent Posts Widget