வால்டர் - விமர்சனம்
சத்யராஜ் நடித்து 1993ல் வெளிவந்த வால்டர் வெற்றிவேல் படம் பெரிய வெற்றி பெற்ற படம். அந்தப் பெயரில் பாதியை வைத்தால் தன் படமும் பாதியாவது வெற்றி பெறும் என்று சிபிராஜ் நினைத்திருப்பார் போலிருக்கிறது. நினைத்தால் மட்டும் போதுமா அந்தப் படம் போல எடுத்தால்தானே அந்தப் பாதியிலாவது வெற்றி பெற முடியும்.
அறிமுக இயக்குனர் அன்பு எடுத்துக் கொண்ட கதை எல்லாம் ஓகே. ஆனால், அதை எப்படி விறுவிறுப்பாகச் சொல்ல வேண்டும் என்பதில் தடுமாறியிருக்கிறார்.
கும்பகோணத்தில் ஏஎஸ்பி ஆக இருப்பவர் சிபிராஜ். அந்தத் தொகுதியில் சர்வ வல்லமை படைத்த எம்எல்ஏ ஆக இருப்பவர் பவா செல்லத்துரை. அரசியலில் தான் வளர்த்த சமுத்திரக்கனி தனக்குப் போட்டியாக வளர்ந்ததைக் கண்டு அவரை என்கவுண்டரில் போடச் சொல்கிறார். எஸ்பி உத்தரவுப்படி சமுத்திரக்கனியை என்கவுண்டர் செய்கிறார் சிபிராஜ். இதனிடையே, கும்பகோணத்தில் பிறக்கும் குழந்தைகள் காணாமல் போய் தானாகவே கிடைத்து மறுநாளே இறந்தும் போகின்றன. அதன் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகக் கருதி விசாரணையில் இறங்குகிறார். ஒரு இரவில் சிபிராஜையும், அவரது காதலி ஷிரின் கான்ச்வாலாவையும் கொல்ல முயற்சிக்கிறார் நட்டி. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு போலீஸ் கதை என்றாலே எவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல முடியுமோ அவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் அந்த கேஸ் பைலை எடுங்க என நாலே பக்கம் இருக்கும் பைலை அடிக்கடி எடுத்துப் படிக்கிறார் சிபிராஜ். அவருடைய விசாரணையில் அவ்வளவு மந்தம்.
காக்கிச்சட்டை போட்டு விட்டால் விறைப்பாக நடக்க வேண்டும். அடிக்கடி மீசையைத் தடவ வேண்டும், காதலிக்கக் கூட நேரமில்லாமல் கடமை, கடமை என பறக்க வேண்டும், மேலதிகாரி சொல்வதைக் கூடக் கேட்காமல் தனி ரூட்டில் விசாரிக்க வேண்டும் என ஒரு சினிமா போலீஸ் கதாநாயகன் என்னவெல்லாம் செய்வாரோ அவை அனைத்தையும் சரியாகச் செய்துள்ளார் சிபிராஜ்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் நாயகியாக அறிமுகமான ஷிரின் கான்ச்வாலா தான் இப்படத்தின் கதாநாயகி. பார்க்க அழகாக இருக்கிறார். கொஞ்சமே கொஞ்சம் நடிக்கிறார். மற்றபடி அவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
படத்தின் முக்கிய வில்லன் பவா செல்லத்துரை. வசனங்களை அப்படியே ஒப்புவிக்கிறார். முகத்தில் நடிப்பு துளி கூட வரவில்லை. இவ்வளவு கனமான கதாபாத்திரத்தை அவரை நம்பி கொடுத்து அவர்களும் ஏமாந்து, ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டார்கள். வில்லன் வெயிட்டாக இல்லாததே இப்படத்தின் மிகப் பெரும் மைனஸ்.
நட்டி இடைவேளைக்குப் பிறகே வருகிறார். பரபரப்பாக என்னவோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் சிபிராஜை போனில் மட்டுமே மிரட்டுகிறார்.
சமுத்திரக்கனி எந்த அட்வைஸும் சொல்லாமல் சீக்கிரமே கொல்லப்பட்டு இறந்து போகிறார். ரித்விகா வில்லனின் மகள். சனம் ஷெட்டி ஒரே ஒரு காட்சியில் வந்து ஆபாசமாக நடித்துவிட்டுப் போகிறார். வழக்கமான க்ளிஷே கதாபாத்திரங்கள், காட்சிகள் என படத்தில் நிறையவே இருக்கின்றன.
தர்மபிரகாஷ் இசையில் பாடல்கள் சரியில்லை. பின்னணி இசையும் பிரமிக்கும்படி இல்லை. ராசாமதியின் ஒளிப்பதிவில் குறிப்பிடும்படி எதுவுமில்லை.
குழந்தைக் கடத்தல், அதன் பின்னணியில் அபூவர்மான பாம்பே பிளட் குரூப் என பரபரப்புக்கு ஏற்ற கருவைத் தேர்வு செய்துவிட்டு, அதை பரபரப்பில்லாமல் சொல்லி சோதித்துவிட்டார்கள்.
Post a Comment