பாடசாலைகளை மீண்டும் திறந்து மாணவர்களை அனுமதிப்பது குறித்து நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறு திறக்கப்படும் ஒவ்வொரு பாடசாலைகளையும் கிருமி நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சுகள் மற்றும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது எமது நாடு மற்றும் கல்வி நிறுவனங்கள் வேகமாக வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையிலும், பிள்ளைகளை சுகாதார பழக்கங்களை விட்டும் தூரமாக்கி விடாது, அவர்களின் உடல்நலனை பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டமாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டன.
இக்காலப்பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
2ஆம் கட்டமாக தரம் 05, 13, 11 ஐச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி ஆரம்பமாகும்.
3ஆம் கட்டமாக எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி தரம் 10, 12 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்
4ஆம் கட்டமாக ஜூலை 27 ஆம் திகதி தரம் 3, 4, 6, 7, 8, 9 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
தரம் 10, 11, 12, 13, மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப் பகுதியில் பாடசாலை இடம்பெறும்.
அத்துடன் தரம் 03, 04 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கை மு.ப. 7.30 - மு.ப. 11.30 மணி வரையும், தரம் 05 வகுப்புக்கு நண்பகல் மு.ப. 7.30 - நண்பல் 12.00 மணி வரையிலும், தரம் 06, 07, 08, 09ஆம் தரங்களுக்கு வழமை போன்று பிற்பகல் மு.ப. 7.30 - பி.ப. 1.30 மணி வரையும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment